;
Athirady Tamil News

வடகொரியாவில் காய்ச்சலுக்கு 6 பேர் பலி: தனிமைப்படுத்தப்பட்ட 1,87,000 பேர்…!!

0

சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இவற்றில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் தப்பவில்லை. எனினும், ஒரு சில நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுத்தவில்லை என தகவல் வெளியானது. வடகொரியாவில் கொரோனா தொற்று ஏற்படவேயில்லை என அரசு தொடர்ந்து கூறி வந்தது.

இந்நிலையில், அந்நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த நபர் யார் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை. இதனை தொடர்ந்து, கொரோனாவை ஒழிப்போம் என உறுதி பூண்டுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தேசிய அளவில் அவசரகால நிலையை பிறப்பித்து உள்ளார்.

இதேபோன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அவர் அறிவிப்பு வெளியிட்டார். வடகொரியாவில் தொற்று இல்லை என இதுவரை தகவல் வெளிவந்த நிலையில், ஒருவருக்கு பாதிப்பு உறுதியான சூழலில் நாடு முழுவதும் அதிபர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருப்பது உலக நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் ஏப்ரல் இறுதி வரையில், மர்ம காய்ச்சல் நாடு முழுவதும் பரவியுள்ளது என வடகொரியா தெரிவித்து உள்ளது. இதற்கு 3,50,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரிய அதிபர் முக கவசம் அணிந்திருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 6 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து காய்ச்சல் பாதிப்புகளை முன்னிட்டு, நாட்டில் 1,87,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என வடகொரியா தெரிவித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.