;
Athirady Tamil News

சா/தர பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு !!

0

நாளையதினம் (23) ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகள் மற்றும் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் வழமையான நேரத்தை விட சில நிமிடங்களுக்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன, மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

5 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ள அதேவேளை 25,000க்கும் மேற்பட்டஅதிகாரிகள் பரீட்சை சார்ந்த கடமைகளில் ஈடுபடவுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களை பரீட்சை மண்டபங்களுக்கு வருகைதர அவகாசம் வழங்குமாறு மேற்பார்வையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பரீட்சை வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்ட பின்னர், 30 நிமிடங்களுக்குள் பரீட்சை மண்டபத்துக்கு பரீட்சார்த்திகள் நுழைவதற்கு சட்டம் அனுமதிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், சிறப்பு சூழ்நிலைகள் காரணமாக, அந்த காலக்கெடுவை மீறி, தாமதமாக வருகை தந்தாலும் மாணவர்களை மன்னிக்குமாறு மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

பரீட்சைக்கு தாமதமாக வரும் எந்தவொரு பரீட்சார்த்தியையும் நிராகரிக்க வேண்டாம் என்றும் மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட காலத்தை விட 5 மாதங்கள் தாமதித்து இப்பரீட்சை நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய அவர், பல சவால்களுக்கு மத்தியில் இம்மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாகவும் சவால்களை வெற்றிக்கொள்வதே மாணவர்களுக்கு தற்போது இருக்கும் இலக்கு என்றார்.

தற்போது முஸ்லிம் மாணவர்கள் முகத்தை முழுமையாக மறைத்து பரீட்சைக்கு தோற்றுவது
தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளதாகத் தெரிவித்த அவர், முஸ்லிம் மாணவர்கள்
சாதாரணமாக ஹிஜாப் அணிந்து பரீட்சைகளுக்கு தோற்ற முடியும் என்பதுடன், முழுவதுமாக
முகத்தை மறைத்து பரீட்சைக்கு தோற்றுவது தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இன்று ஆரம்பமாகி, ஜூன் 1ஆம் திகதியன்று நிறைவடையவுள்ள பரீட்சையில் தோற்றுவதற்கு 517,496 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதில், பாடசாலை விண்ணப்பதாரிகள் 407,129 பேரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் 110,367 பேரும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இம்முறை பரீட்சை நடத்துவத்றகு 3,844 பரீட்சை நிலையங்கள் மற்றும் 542 ஒருங்கிணைப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.