;
Athirady Tamil News

லைவ் அப்டேட்ஸ்: நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புவது குறித்து அமெரிக்கா பரிசீலனை..!!

0

28.5.2022

04.10: ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களைச் சுற்றி வளைக்க முயற்சித்து வருவதாகவும் பல கிராமங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக தொடர்ந்து ஆதரவளிப்பது முற்றிலும் இன்றியமையாதது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

03.10: ரஷியாவிற்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புகளை அனுப்புவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிசீலித்து வருவதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

02.45: உக்ரைன் அதிபர் ஜெலஸ்ன்கியுடன், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்த இத்தாலி அரசின் ஆதரவை அவர் எடுத்துரைத்தார்.

போர் காரணமாக உலகின் ஏழ்மையான நாடுகளை அச்சுறுத்தும் உணவு நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில், தானிய ஏற்றுமதியை அனுமதிக்க உக்ரைன் துறைமுகங்களை திறப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தலைவர்கள் விவாதித்தனர்.

01.50: ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைனில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் ஆலோசனை நடத்தினார்.

வரும் மாதங்களில் உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப பைடன் நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் பிளிங்கன் அப்போது கூறியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

12.40: ரஷியா ஆர்த்தடாக்ஸ் தேவாலய அமைப்பில் இருந்து பிரிவதாக உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பிற்கு ஆதரவாக செயல்படும் ரஷிய தேவாலய தலைவரை அவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த போர் கடவுளின் கட்டளையை மீறுகிறது என்றும், இதை கண்டிப்பதாகவும, பொதுமக்களை கொல்ல வேண்டாம் என்றும் உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் தேவால தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

27.5.2022

21.30: உக்ரைன் தனது துறைமுகங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து கடல் கண்ணி வெடிகளை அகற்றி பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாமருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் புதின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். உக்ரைன் உடனான போர் காரணமாக உலக சந்தைகளுக்கு விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள சிரமங்களுக்கு ரஷியாவைக் குறை கூறும் முயற்சிகள் ஆதாரமற்றவை என்று புதின் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷியாவிற்கு எதிராக விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

16.45: உக்ரைனின் டான்பாஸ் மாகாணம் லுகன்ஸ்க் நகரில் உள்ள செவிரொடொனெட்க்ஸ் நகரில் உக்ரைன், ரஷிய படைகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக செவிரொடொனெட்க்ஸ் நகரில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60 சதவீத குடியிருப்பு கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளது என நகர மேயர் தெரிவித்துள்ளார்.

13.54: உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடையை விதித்தன. அந்த நாடுகளின் நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறின. இதற்கு நன்றி தெரிவித்த ரஷிய அதிபர் புதின், ‘வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியது, உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இடமளிக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட சொகுசு சாதனங்களை இனி ரஷியாவே உருவாக்கும்’ என கூறினார்.

10.38: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு சில உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதுகுறித்து முதல் யூரேசிய பொருளாதார அமர்வில் பேசிய ரஷிய அதிபர் புதின், ‘ரஷியாவை உலக நாடுகள் தனிமைப்படுத்த நினைப்பது சாத்தியமற்றது. அவ்வாறு செய்ய விரும்பும் நாடுகள், தங்களுக்கு தாங்களே தீமை விளைவித்து கொள்கின்றன’ என கூறினார்.

04.30: ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது. ரஷியா உக்ரைன் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்த பெலாரஸ் பகுதிகளை பயன்படுத்தி வந்தது. எனினும் இந்த போரில் இதுவரை ரஷியாவிற்கு ஆதரவாக பெலாரஸ் களம் இறங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் உக்ரைனின் எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

03.30: மரியுபோல் துறைமுக பகுதியில் இருந்து நேற்று ஐந்து வெளிநாட்டு கப்பல்கள் வெளியேறியதாக ரஷிய வெளியுறவுஅமைச்சகம்தெரிவித்துள்ளது. அசோவ் துறைமுக பகுதி வழியாகவும், கருங்கடலில் உள்ள கெர்சன் மற்றும் ஒடெசா வழியாகவும் வெளிநாட்டு கப்பல்கள் உக்ரைனில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்படும் என்று ரஷிய வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது. இதையடுத்து பாதுகாப்பு வழி உருவாக்கப்பட்ட நிலையில், ஐந்து வெளிநாட்டு கப்பல்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

02.20: உக்ரைன் உடனான போரில் பங்கேற்க மறுத்த ரஷிய ராணுவ வீரர்கள் 115 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்து ரஷிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உக்ரைனில் போர் தொடங்கியது முதல் ரஷிய ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க மறுத்த வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ரஷிய நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது

01.30: உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு நடவடிக்கைகள் உலகிற்கு ஒரு திருப்புமுனையாக இருப்பதாக பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடனான மாஸ்கோவின் உறவுகள் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு முன்பு இருந்த நிலைக்கு திரும்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

12.10: சில வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மெக்டோனால்ட்ஸ் உணவகங்கள் தற்போது ரஷியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளதால் மகிச்சியடைவதாகவும், இதனால் உள்நாட்டு வணிக நிறுவனங்கள் அவற்றின் இடத்தைப் பிடிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.