;
Athirady Tamil News

நாட்டிற்கு மதவாத அரசியலால் தான் ஆபத்து, குடும்ப அரசியலால் அல்ல: குமாரசாமி..!!

0

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சுலபமானது அல்ல பிரதமர் மோடி, குடும்ப அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது என்று கூறியுள்ளார். இது அவரது புதிய உபதேசம். நாட்டின் தற்போதைய நிலை குறித்து அவர் பேசி இருக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் பிரசாரத்தில் பேசுவது போல் பேசியிருக்கிறார். காங்கிரஸ் பலவீனம் அடைந்துவிட்ட பிறகு மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு மாநில கட்சிகளே சவாலாக திகழ்கின்றன.

இந்த கட்சிகளை ஒழித்துக்கட்ட பா.ஜனதா என்ன செய்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயப்பிரகாஷ் நாராயண் பல்வேறு கட்சிகளை ஒன்று திரட்டி ஜனதா பரிவார் பெயரில் போராடினார். அந்த பரிவாரில் பா.ஜனதாவும் ஒரு கட்சியாக இருந்தது. ஜனதா பரிவாரில் ஜனதா தளம் (எஸ்), ஜே.டி.யு., ஆர்.ஜே.டி., பி.ஜே.டி., சமாஜ்வாதி கட்சிகளும் ஒரு அங்கமாக இருந்தன. இந்த கட்சிகளின் வேர் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதனால் இந்த கட்சிகளை அழிப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.

குடும்ப அரசியலுக்கு எதிராக பேசும் மோடி, அவரது கட்சியில் இருக்கும் குடும்ப வாரிசுகள், ஊழல் குறித்து ஏன் பேசுவது இல்லை. நாட்டிற்கு ஆபத்து இருப்பது குடும்ப அரசியலால் அல்ல, பா.ஜனதாவின் மதவாத அரசியலால் தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உணர்வு பூர்வமாக மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது என்பது தான் ஜனநாயகத்திறகு உண்மையான எதிரி.

கர்நாடகத்தில் 2 முறை பா.ஜனதா அரசு எப்படி வந்தது?. நேர்மையான வழியில் பா.ஜனதா ஆட்சியை பிடித்ததா?. எம்.எல்.ஏ.க்களை சந்தையில் மாடுகளை பேரம் பேசி வாங்குவது போல் வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தது. இந்த ஊழல் அரசுக்கு பிரதமர் மோடி அனுமதி அளித்தது பொய்யா?. ஆபரேஷன் தாமரையை தேசியமயம் ஆக்கிய இந்த மோசமான அரசியலை கண்டு மவுனம் காத்தது மோடி இல்லையா?.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பதவியை விற்பனைக்கு வைத்தது யார்?. அந்த பதவிக்கு ரூ.2,500 கோடி கேட்டனர் என்று கூறியது பா.ஜனதா எம்.எல்.ஏ.. அந்த எம்.எல்.ஏ. மீது பா.ஜனதா நடவடிக்கை எடுத்ததா?. குடும்ப அரசியலை முன்வைத்து மாநில கட்சிகளை அழிக்க நினைக்கும் பா.ஜனதாவின் முயற்சி வெற்றி பெறாது. இந்தியா என்றால் பா.ஜனதா மட்டுமல்ல. 140 கோடி பேரை உள்ளடக்கியது தான் இந்தியா. இதை மோடி புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.