;
Athirady Tamil News

யாழ்ப்பாணக் கல்லூரியினைப் பாதுகாப்போம்; சனியன்று எதிர்ப்புப் போராட்டம்!!

0

யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பினால் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி சனிக்கிழமை காலையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையில் இடம்பெறும் மோசமான யாப்பு மீறல்களைக் கண்டிக்கும் வகையிலும், கல்லூரியின் நிருவாகத்திலே ஆளுநர் சபையின் தலைவர் மேற்கொண்டு வரும் முறையற்ற தலையீடுகளை எதிர்க்கும் வகையிலும், யாழ்ப்பாணக் கல்லூரி நிதிகளின் தர்மகர்த்தா சபைக்கு எதிராக ஆளுநர் சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எதிர்வரும் சனிக்கிழமை (ஜூன் 4) காலை 9 மணிக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முன்பாக, தெல்லிப்பழை வீதியின் இரு மருங்கிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியின் நிருவாகிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சமய – சமூகத் தலைவர்கள், அரசியற் தலைவர்கள், கல்வியாளர்கள், சட்டத்தரணிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பெண்ணியச் செயற்பாட்டாளர்கள், மற்றும் கல்லூரிக்கு அருகில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், நாடு முழுவதிலும் இருக்கும் யாழ்ப்பாணக் கல்லூரியின் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

“யாழ்ப்பாணத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகவும், வரலாற்று ரீதியாக வடக்குப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும், ஜனநாயக சமூக உருவாக்கத்துக்கும், சமூக நீதிக்குமாக அளப்பரிய பணிகளை ஆற்றிய யாழ்ப்பாணக் கல்லூரி, அதனது தற்போதைய ஆளுநர் சபையின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜாவின் எதேச்சாதிகார நடவடிக்கைகளினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலமையில் இருந்து கல்லூரியினை மீட்டெடுத்து ஜனநாயகத்திற்கும், நல்லாட்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கல்வி நிறுவனமாக யாழ்ப்பாணக் கல்லூரியினை மாற்றும் நோக்குடன் இந்தப் போராட்டம் இடம்பெறும்” என்று யாழ்ப்பாணக் கல்லூரியினைப் பாதுகாப்போம் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.