;
Athirady Tamil News

11 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது!!

0

கோண்டாவிலில் களஞ்சிய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியை உடைத்து சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருடிய இலத்திரனியல் பொருள்களை இன்றைய தினம் விற்பனை செய்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருநெல்வேலியில் அமைந்துள்ள இலத்திரனில் பொருள்கள் விற்பனை நிலையத்தின் களஞ்சியம் கோண்டாவிலில் உள்ளது.

கடந்த மாதம் வர்த்தக நிலையத்துக்கு எடுத்து வருவதற்காக பாரவூர்தியில் பொருள்கள் ஏற்றப்பட்ட நிலையில் டீசல் இல்லாமை காரணமாக தரித்துவிடப்பட்டிருந்தது. அதன்போதே இரவு வேளை பாரவூர்தி உடைக்கப்பட்டு சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் வர்த்தகரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோண்டாவிலைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே இந்த திருட்டை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக 4 வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.