;
Athirady Tamil News

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்- 4 நாள் போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்பு..!!

0

சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி – ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல் சாஹு. கடந்த கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் ராகுல் தவறி விழுந்தான்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் சுரங்கம் தோண்டும் பணி நடந்தது. பின்னர் அந்த சுரங்கம் வழியே சிறுவன் சிக்கி இருந்த இடத்திற்கு டிரில் மிஷன் மூலம் துளை போட்டு மீட்பு படையினர் சென்றனர்.

முன்னதாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பிய மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிறுவனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மீட்பு பணியை ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டன. மொத்தம் ஐநூறு பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் ராகுல் ஷாஹுவை உயிருடன் மீட்ட மீட்பு படையினர், சுரங்கம் வழியே வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக அந்த சிறுவன் பிலாஸ்பூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜாங்கிரி – ஷம்பா மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் எங்கள் அணி வெற்றி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் இடைவிடாத அர்ப்பணிப்பு முயற்சியாலும், ராகுல் சாஹு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.