;
Athirady Tamil News

எரிபொருள் கிடைக்காவிடின் சுகாதார சேவை ஸ்தம்பிக்கும்.!!

0

எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

வட மாகாணத்தில் உள்ள மக்கள் அனைவருக்குமான ஒரே ஒரு போதனா வைத்தியசாலையாக இருக்கும் எமது வைத்தியசாலை ஆளணிப் பற்றாக்குறை இருந்தபோதும் சிறப்பாக சேவையாற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையானது எல்லோரையும் போல் எம்மையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

அதிலும் எரிபொருள் இன்மை காரணமாகவும், அதன் சீரற்ற வழங்கல் காரணமாகவும் வைத்திய சேவை முடங்கும் ஆபத்து உருவாகியுள்ளது.

இதை அனைவரும் உணரத் தலைப்பட்டுள்ளனர். ஆனாலும் சில குறுகிய நோக்கம் உள்ள, மனிதநேயம் அற்ற சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்களை உருவாக்கி வைத்தியசாலை ஊழியர்கள் எரி பொருள் பெறுவதை தடுப்பதன் மூலம் இன்பம் காண்கின்றனர்.

இருப்பினும் சுகாதார அமைச்சு வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யும் முகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வைத்தியசாலை மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் எரிபொருளை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கும் முடிவை எடுத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக இருப்பினும் அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு. அரச அதிபரும், பிரதேச செயலர்களும், போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையினரும் மனப்பூர்வமாக முன்வரவேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே பொது மக்களையும் உரிய தரப்பினரையும் உணர்ந்து செயற்பட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.