;
Athirady Tamil News

சிவசேனாவை அழிக்க நினைக்கிறது பாஜக- உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு..!!

0

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி வெளியேறி பாஜகவுடன் ஆட்சி அமைக்க வலியறுத்தி, அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். இதனால் ஆளும் சிவசேனா அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் சிவசேனா தொண்டர்கள் மத்தியில் காணொலி மூலம் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: ராஜ்தாக்கரே இந்துத்துவா வாக்குகளைப் பிரிக்கக் கூடாது என்று சொன்னதால், பாஜகவுடன் நாங்கள் இருந்தோம், அதன் விளைவுகளை இப்போது அனுபவித்து வருகிறோம். எங்களை விட்டு பிரிந்தவர்கள் பாஜகவுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை. பாஜக ஒரே ஒரு விஷயத்தை விரும்புகிறது. அது சிவசேனாவை முடிக்க வேண்டும். நான் பயனற்றவன், கட்சி நடத்தத் தகுதியற்றவன் என்று நீங்கள்( அதிருப்தி எம்எல்ஏக்கள்) நினைத்தால், சொல்லுங்கள். கட்சியில் இருந்து விலக நான் தயார். சில நாட்களுக்கு முன்பு ஏக்நாத் ஷிண்டேவை அழைத்து, சிவசேனாவை முன்னோக்கி கொண்டு செல்லும் கடமையைச் செய்யச் சொன்னேன். தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகள் எங்களை முடிக்க முயற்சிக்கின்றன என்றும், எம்எல்ஏக்கள் பாஜகவுடன் செல்ல விரும்புகிறார்கள் என்றும் அவர் என்னிடம் கூறினார். அப்படி விரும்பும் எம்எல்ஏக்களை என்னிடம் அழைத்து வரச் சொன்னேன். இன்று காங்கிரஸும், தேசியவாத காங்கிரசும், எங்களை ஆதரிக்கின்றன. சரத் பவாரும் சோனியாகாந்தியும் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். ஆனால் எங்களுடைய சொந்தக்காரர்கள் எங்களை முதுகில் குத்திவிட்டார்கள். வெற்றி பெற முடியாதவர்களுக்கு சீட்டு கொடுத்து வெற்றி பெறச் செய்தோம். அவர்கள் இன்று எங்களை முதுகில் குத்திவிட்டனர். கட்சியில் இருந்து போக வேண்டியவர்கள் போகலாம். சிவசேனாவை மீண்டும் எழுப்புவேன். நீங்கள் என்னுடன் இருக்கும் போது, எனக்கு வேறு எதைப் பற்றியும் கவலை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டசபை துணை சபாநாயகரை சிவசேனா வலியுறுத்தி உள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் எம்.பி. அரவிந்த் சாவந்த், அதிருப்தி எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி துணை சபாநாயகரிடம் இன்று அல்லது நாளை நோட்டீஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.