;
Athirady Tamil News

முல்லைத்தீவில் அருவருக்கத்தக்க செயற்பாடுகள் அதிகரிப்பு!!

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான விடயத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆளுமையற்ற நிர்வாகக் கட்டமைப்புகள் காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடிய இவ்வாறான அருவருக்கத்தக்க செயற்பாடுகள் அதிகரித்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் ஆசிரியர், மாணவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக ஊடகங்களினூடாக அறியக்கூடியதாகவிருந்தது.

குறிப்பாக அண்மைக்காலங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவருவதை ஊடகங்களூடாக அறிகின்றோம்.

இத்தகைய சம்பவங்கள் மிகவும் மோசமானது. இதனை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறாக பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரியவர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக எடுக்கப்படுகின்ற நடவடிக்கையானது, மீண்டும் ஒருதடவை இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறாது இருக்கின்ற வகையில் மிக இறுக்கமான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

அதேவேளை கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர், முல்லைத்தீவு மாவட்டம் கல்வி, ஒழுக்கம், கலாசாரம் என அனைத்திலும் மிகவும் சிறந்து விளங்கிய மாவட்டமாக இருந்தது.

ஏனெனில் 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் மிகவும் இறுக்கமானதும், ஒழுக்கமானதுமான மிகச்சிறந்த நிர்வாகக் கட்டமைப்பு இந்த மாவட்டத்தில் இருந்தது.

இந் நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் நற்பெயரை சீர்குலைக்கும் வகையிலான இவ்வாறான செயற்பாடுகள் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலைக்கு தற்போது உள்ள இறுக்கமற்றதும், ஆளுமையற்றதுமான நிர்வாக கட்டமைப்பே காரணமெனக் கூறவேண்டியிருக்கின்றது.

அத்தோடு இத்தகைய துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கின்ற வகையில் மாணவ, மாணவிகளது பெற்றோரும் விளிப்பாக இருக்க வேண்டும்.

மாணவர்களது பாதுகாப்பில் அவர்களது பெற்றோரும், பாதுகாவலர்களும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

மேலும் இந்த மாணவிகள் மீதான துஷ்பிரயோக சம்பவம், நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றது. எனவே நீதிமன்றம் இந்த துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கெதிராக நல்லதொரு தீர்ப்பினை வழங்கும் என நம்புகின்றேன் – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.