;
Athirady Tamil News

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸ்..!!

0

மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-தேசிய வாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சிவ சேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். அவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான தனி அணியை உருவாக்கி உள்ளார். மொத்தம் உள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றுள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமானதால் பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு சமரசப்படுத்த முயன்றனர். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. முதல்- மந்திரி பதவியை விட்டு விலக தயார் என்று உத்தவ் தாக்கரே அறிவித்தும் பார்த்தார். அதையும் அதிருப்தி அணி ஏற்றுக் கொள்ளவில்லை. முதல்- மந்திரி பதவியைதான் விரும்பவில்லை என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதோடு தனது தலைமையிலான குழுதான் உண்மையான சிவசேனா என்றும் அவர் உரிமை கோரினார். இந்த நிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முதலில் 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து சஞ்சய்ராய் முல்கர், ஸ்ரஹிமேன்படேல், ரமேஷ் பார்னரே, பாலாஜி கல்யாண்கர் ஆகிய 4 உறுப்பினர்களுக்கு நோட் டீஸ் அனுப்பி உள்ளது. மொத்தம் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நாளை மறுநாளுக்குள் நோட்டீஸூக்கு பதிலளிக்க சட்டமன்ற துணை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மும்பையில் புதன்கிழமை மாலையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. 27-ந்தேதிக்குள் விளக்கத்தை அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக சிவசேனா எம்.பி. அரவிந்த் சவாந்த் தெரிவித்தார். மேலும் 16 அதிருப்தி எ.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரியும் துணை சபாநாயகருக்கு சிவசேனா கடிதம் ஒன்றையும் அனுப்பி உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசையும் இணைத்து இருக்கிறது. இந்த நோட்டீசை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். 27-ந்தேதி அவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு சிவசேனா எம்.எல்.ஏ. அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்துள்ளார். திலீப் லாண்டே என்ற எம்.எல்.ஏ. கவுகாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஏக்நாத் ஷிண்டேவுடன் தன்னை இணைத்துக் கொண்டார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அதிருப்தி குழுவில் உள்ள சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது. ஆனால் தனக்கு மொத்தம் 52 எம்.ஏல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக ஷிண்டே தெரிவித்து உள்ளார். 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 12 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பக்கம் இருப்பதாக அவரது தரப் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாங்கள்தான் உண்மை யான சிவசேனா என்று துணை சபாநாயகருக்கு ஏக்நாத் ஷிண்டே கடிதம் அனுப்பி உள்ளார். இன்று பிற்பகல் அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் சிவ சேனா கட்சியின் ஆலோ சனை கூட்டம் இன்று நடக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.