;
Athirady Tamil News

எரிபொருள் நெருக்கடி : முழு நாடும் முடங்கும் நிலை!!

0

நாட்டில் தற்போது எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்று வருவதால் முழு நாடும் முடங்கும் நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக நாட்டின் சகல பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்து வெகுவாக குறைவடைந்துள்ளது.

தலைநகர் கொழும்பின் நகர, புறநகர் பகுதிகளில் மட்டுமல்லாது வாகன நெரிசல் அதிகமாகக் காணக்கடிய நாட்டின் ஏனைய நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து குறைவடைந்துள்ளது.

சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக அத்தியவசிய சேவை பிரிவினருக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குமாறு அரசாங்கம் கடந்த 27 ஆம் திகதியன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி, சுகாதார சேவைப் பிரிவினர், ‍ பொதுப் போக்குவரத்து பிரிவினர், ரயில்வே திணைக்கள பிரிவினர் மற்றும் முப்படையினர் ஆகியோருக்கு மாத்திரமே எரிபொருள் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தால், தனியார் போக்குவரத்து துறையை நம்பி தமது அன்றாட பயணங்களை மேற்கொள்பவர்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வோரும் பெரும் அவஸ்தையை அனுபவித்து வருவதாக புத்தி ஜீவிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எரிபொருள் இல்லாததன் காரணமாக நாடு தானாகவே முடங்கும் நிலையை அடைந்து வருவதாகவும், மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றுமே இன்றி அமையாத விடயங்கள் என கூறுவார்கள். ஆயினும், தற்போது இது மாறியுள்ளது.

தற்போது நம் நாட்டு மக்கள் பலரும் உணவின்றி, உடைகளை மாற்றாது, வீடுகளில் படுத்துறங்காது நாடோடிகள் போல் அங்குமிங்கும் அலைந்து திரிகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புத்தி ஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அத்தியவசிய ‍சே‍வை பிரிவினருக்கு மாத்திரம் எரிபொருட்களை விநியோகிப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினால் போக்குவரத்து துறைகளில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், மோட்டார் சைக்கிள்களில் உணவு மற்றும் பொதிகள் விநி‍யோகிப்பவர்கள், வாடகைக் கார் ஓட்டுநர்கள் என போக்குவரத்துத் துறையை தொழிலாகக் கொண்டவர்கள் பெரிதும் பொருளாதார நெருக்கடி முகங்கொடுத்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களில் வகைகளுக்ககேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 1500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிகளுக்கு 2500 ரூபாவுக்கும், மோட்டார் வாகனங்களுக்கு 7000 ரூபாவுக்கும் பெற்றோல் வழங்குவதற்கு ஐ.ஓ.சி. நடவடிக்கை எடுத்துள்ளது.

என்றபோதிலும், பெற்றோலை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன்கள‍ை பெற்றக் கொள்வதற்கு, பொது மக்கள் நீண்ட வரிசைகளில் நாட் கணக்காக காத்து வருகின்றனர்.

அத்தியவசிய சேவை பிரிவினருக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குமாறு அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவு எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை நடைமுறையில் காணப்படும்.

எனினும், இந்த உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டால் நாடு பெரும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர்கள் ‍ அச்சம் தெரிவித்தனர்.

ஆகவே, எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களை தடையின்றி மக்கள் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் காலம் தாழ்த்தாது வெகு விரைவில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக வேண்டும்.

மேலும், நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதற்கு அரசியல் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு அரசியல் தலைவர்கள் காத்திரமான தீர்மானங்களை எடுப்பது அவசியம் என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.