;
Athirady Tamil News

அ.தி.மு.க. தலைமைக்கு முட்டி மோதும் மூன்று தலைவர்கள்- ஜெயிக்க போவது யார்..!!

0

ஈ.பி.எஸ்…!
ஓ.பி.எஸ்…!
வி.கே.எஸ்…!

இந்த 3 எஸ்களுக்குள்ளும் தான் இறுதிப்போட்டி. மியூசிக்கல் சேர் சுற்றி பிடிக்கும் போட்டியில் இறுதி கட்டத்தில் ஒற்றை நாற்காலியை கைப்பற்ற களத்தில் 3 பேர் சாதுர்யமாக ஓடிக்கொண்டிருப்பார்கள். கடைசியில் ஒருவர்தான் நாற்காலியை கைப்பற்றுவார். அதே போல்தான் இப்போது அ.தி.மு.க. என்ற கட்சியை கைப்பற்ற போவது யார் என்ற போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தை பார்வையாளர்களான மக்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். களத்தில் நிற்கும் 3 போட்டியாளர்களுமே பிரபலமானவர்கள் தான். ஈ.பி.எஸ். என்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். என்ற ஓ.பன்னீர்செல்வம், வி.கே.எஸ். என்ற வி.கே.சசிகலா. ஜெயலலிதா என்ற ஒற்றை தலைமை மறைந்ததால் அந்த இடத்தை பிடிக்கவும் மிகப்பெரிய இயக்கத்தை தன் வசப்படுத்தவும் இந்த 3 தலைகளும் முட்டி மோதுகின்றனர். சாதாரணமாக இருந்த சசிகலா ஜெயலலிதாவின் உயிர்த்தோழியாகியதால் அம்மாவுக்கு அடுத்த இடத்தில் சின்னம்மாவை வைத்துதான் அழகு பார்த்தார்கள். ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட சர்ச்சைகளும், சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியதும் கட்சியின் பிடிமானத்தை இழக்க வைத்தது. முதல்வரான எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக கட்சியை ஒருங்கிணைக்க களம் இறங்கினார். அதன் ஒரு கட்டமாக ஓ.பன்னீர்செல்வம் அணியையும் இணைத்துக்கொண்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இணைந்த கைகள் ஒரு கட்டத்தில் இரட்டை தலைமை வேலைக்கு ஆகாது, ஒற்றை தலைமையை கொண்டு வருவோம் என்று காய் நகர்த்த தொடங்கினார்கள். இதில் எடப்பாடி பழனிசாமியின் சாதுர்யமான ஆட்டம் கட்சியினரை ஈர்த்தது. தொண்டர்களும், நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியின் பக்கத்தில் குடிபுகுந்தார்கள். பொதுக்குழுவை கூட்டி மகுடம் சூட இருந்த தருணத்தில் ஓ.பன்னீர்செல்வம் கோர்ட்டு மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கட்டை போட்டார். ஆனால் அதையும் சாதுர்யமாக அடித்து ஆடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று கோர்ட்டு அறிவித்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி மொத்த தீர்மானங்களையும் நிராகரிக்க செய்து ஒற்றை தலைமை தேர்வுக்காக அடுத்த பொதுக்குழு தேதியையும் அறிவிக்க செய்தார். எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் அதரவு அதிகம் இருப்பது கண்கூடாக தெரிகிறது. ஆனால் ஒற்றை தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இல்லை. புதிய வியூகம் அமைக்க தொடங்கி உள்ளார்கள். 2017ல் அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி இருந்தும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதால் அ.தி.மு.க. கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடங்கியது. அந்த நெருக்கடியில் இருந்து மீளமுடியாத நிலை வந்தபோது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை தூக்கி விட்டு புதிதாக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கி இரட்டை தலைமையின் கீழ் கட்சியை கொண்டு வந்து முடக்கப்பட்ட சின்னத்தையும் மீட்டார்கள். அப்போது கட்சி உடையாமல் இருக்க அந்த இணைப்புக்கு மோடியும், அமித்ஷாவும் உதவினார்கள். அதேபோல் இப்போதும் அவர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கை ஓ.பன்னீர்செல்வத்திடம் இருக்கிறது. ஒருவேளை கட்சியை கைப்பற்றும் போரில் பின்னடைவு ஏற்பட்டால் கடைசி அஸ்திரமாக 2017-ஐ போல் கட்சி சின்னம், பெயரை முடக்க திட்டமிட்டு உள்ளார். உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் இருவரது கையெழுத்தும் இல்லாததால் சின்னம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி சட்டரீதியாகவும் முயற்சிகளை மேற்கொண்டால் தன்னை கேட்காமல் தீர்ப்பளிக்க கூடாது என்று ‘கேவியட்’ மனுவையும் சுப்ரீம் கோர்ட்டில் போட்டு வைத்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வருகிற 11-ந் தேதி பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமையை கொண்டு வர தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த புகார்களுக்கு எடப்பாடி பழனிசாமியும் பதில் கொடுத்துள்ளார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்துடன் அந்த மனுவை கொடுத்து உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி தான் பொதுச் செயலாளர் என்று அவரது ஆதரவாளர்கள் முழு நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல தங்கள் பக்கம் நிர்வாகிகள் ஆதரவு குறைவாக இருந்தாலும் எடப்பாடி தலைமைக்கு கட்சியை அவ்வளவு எளதில் ஓ.பி.எஸ். விட்டு விட மாட்டார் என்பது அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை. இப்படி இங்கு நீயா? நானா? என்று மோதிக்கொண்டிருக்கும் நிலையில் சசிகலா உள்ளே புகுந்து வடிவேலுவும், பாண்டியராஜனும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது எம்.எஸ்.பாஸ்கர் உள்ளே புகுந்து உருவுவதைபோல் கட்சியை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார். புரட்சித்தாய், சின்னம்மா என்ற கோஷத்தோடு 2016-ம் ஆண்டு பொதுச் செயலாளராக முடி சூட்டப்பட்ட சசிகலா மறு ஆண்டே அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக சசிகலா அறிவித்தார். அரசியலில் பதவி சுகம் கண்டவர்கள் அவ்வளவு எளிதில் ஒதுங்குவார்களா ? இல்லை ஒதுங்கத்தான் விடுவார்களா? தனது ஆதரவாளர்ளுடன் செல்போனில் பேசி வந்தார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த ஒரே மாதத்தில் அதாவது 16.10.2021 அன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு அரசியல் மறு பிரவேசம் செய்தார். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் தலைமை பதவிக்கு எழுந்துள்ள போட்டியில் தானும் களம் இறங்கி விட்டதாக பிரகடனப்படுத்தி இருக்கிறார். கையில் செங்கோலுடன் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் காட்சி தரும் சசிகலா 50 ஆண்டு கால வரலாற்றில் கட்சி இப்படி தொடர் தோல்விகளை சந்தித்தது இல்லை. கட்சியில் இன்று நடைபெறும் நிகழ்வுகள் மனதுக்கு வேதனையை தருகிறது என்று தெரிவித்து இருந்தார். ஒரு தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர். பாடலில் வரும் கருணை, கடமை, பொறுமை என்ற மூன்றையும் சுட்டிக் காட்டி இருக்கிறார். அதோடு தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்த பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தி ஆகணும் என்ற பாடலையும் சுட்டிக்காட்டி ஒற்றுமையோடு உழைப்போம் வென்று காட்டுவோம் என்று அறிவித்துள்ளார். இதை பார்த்ததும் சின்னம்மா வந்துட்டாங்கடா… இனி பார்…! என்று அவரது ஆதரவாளர்களும் வேட்டியை மடித்துக் கட்டுகிறார்கள். என்னதான் நடக்கும்… நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே. தன்னாலே வெளிவரும் தயங்காதே… என்ற எம்.ஜி.ஆர். பட பாடல் வரிகளை தான் தொண்டர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.