;
Athirady Tamil News

ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம்!! (மருத்துவம்)

0

ஆயுர்வேதம் என்றால் என்ன? இதற்கு எமது முன்னுள்ள சந்ததியினர் ஏன் முக்கியத்தும் கொடுத்தார்கள்? அதற்கான காரணம் என்ன? என்று இன்றை தலைமுறையினர் சிந்திக்கத் தொடங்கி அதன் உண்மைத் தன்மைகளை அறிந்துகொண்டு இன்று ஆயுர்வேத வைத்திய முறையை மிக அதிகமாக விரும்பி இன்றைய தலைமுறையினர் நாடி வருவதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கான பொறுப்பு வைத்தியர் எஸ்.முஹம்மட் றிஷாத் கூறினார்.

“ஆயுர்வேத மக்கள் விழிப்புணர்வு” எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் போன்ற பிரதேச மக்களுக்கான மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (17) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர்,

“ஆயுர்வேத மருத்துவம், வெறும் நோயின் அறிகுறிகளை மட்டும் தற்காலிகமாகக் குணப்படுத்தாமல், நோயின் அடிப்படைக் காரணத்தைக் களைந்து, வியாதியையும் குணப்படுத்துகிறது. நோயாளிகளின் தலையிலிருந்து, கால்வரை அங்கம் அங்கமாகப் பிரித்துப் பார்க்காமல் உடல் முழுவதையும் ஒன்றாகக் கருதி இந்த சிகிச்சை செய்யப்படுகின்றது. இதனை இன்றைய சந்ததியினர் மிக நன்றாக உணர்ந்துள்ளனர்.

ஆயுர்வேதத்தில், எல்லா நோய்களுக்கும் சிகிச்சை உண்டு. வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் சமநிலைதான் ஆரோக்கியம் என்பதே, ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தம்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களின் ஏற்றத் தாழ்வால் நோய்கள் ஏற்படுகின்றன. ஆகவே, சிகிச்சை என்பது, உடலிலுள்ள தோஷங்களை மீண்டும் ஒரு சம நிலைக்குக் கொண்டு வருவதேயாகும்.

தோஷங்கள் சம நிலையில் இருக்கின்றனவா? அல்லது எந்த தோஷம் சீற்றமடைந்திருக்கிறது என்பதை நாடியின் மூலமாகவும், நோயின் அறிகுறிகள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

ஆயுர்வேதத்தில், உணவுப் பொருட்களின் குணங்கள், விஞ்ஞான ரீதியாக விளக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உணவு மிகவும் இன்றியமையாதது.

நாம் உட்கொள்ளும், அறுசுவை உணவுப் பண்டங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு தோஷத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்கிறது. எனவே சிகிச்சையில், “பத்தியம்’ ஒரு மிக முக்கியமான இடத்தைப் பெறும். உதாரணமாக, வயிற்றில் வலி (சூலம்) வாயுவின் சீற்றத்தால் ஏற்படுகிறது. இதற்கு, வாயுவைச் சீற்றமடையச் செய்யும் உணவுகளைத் தவிர்த்து, உகந்த உணவை உண்பது அவசியமாகும்.

ஆயுர்வேத மருந்துகள், நோயை உடனடியாகக் குணப்படுத்துமா என்ற கேள்வி அடிக்கடி மக்கள் மத்தியில் எழுகிற ஒரு விடயமாகும். நோய் தோன்றிய உடனே தகுந்த சிகிச்சை அளித்தால் நிச்சயமாகச் சட்டென்று குணப்படுத்தலாம். பல வருடங்கள் நோயால் அவதிப்பட்டு விட்டு நாள்பட்ட வியாதிக்கு உடனே குணத்தை எதிர்ப்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயமற்ற ஒரு விடயமாகும்.

இன்றைய சமுதாயத்தில் புதுப் புது நோய்கள் தோன்றுகின்றன. அதற்கு ஆயுர்வேத பழைய முறையைக் கொண்டு இந்த முறையில் புது நோய்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க முடியும் என்பது பற்றி சிலர் கேள்விகளை எழுப்பலாம்.

இதற்கு ஆயுர்வேதம் கூறும் பதில், எல்லா நோய்களுக்கும் உடலின் தோஷங்களான வாதம், பித்தம், கபங்கள் தான் அடிப்படைக் காரணமாகும். புதிதாகத் தோன்றும் நோய்களுக்குக் காரணம் இவையேதான். எனவே, தோஷங்களின் சீற்றத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு சிகிச்சையளித்தால் எந்த நோயையும் குணப்படுத்தி விடலாம். இதற்காக பண்டைக்கால வைத்தியர்கள் ஆயுர்வேத ஆராய்ச்சியை நடாத்துவதற்காக தங்களின் உயிரையே தியாகம் செய்திருக்கின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.