;
Athirady Tamil News

குழப்பங்களுக்கு மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!!

0

பாதுகாப்பு தரப்பினருடன் இணைத்து மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன என யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு. கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்ட இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கத்தின் வருவாயை நோக்கியே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஊடாக கிடைக்கின்ற வருமானதினை கொண்டு மக்களுக்கு நிவாரணம், மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை ஆற்றி வருகின்றோம்.

எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இதுவரை காலமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் மக்களுக்கு எரிபொருளை விநியோகித்து வந்தோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்புத் தரப்பினதும் கச்சேரியினதும் செயற்பாடுகளால் மக்களுக்கு உரிய முறையில் எரிபொருளை பகிர்ந்தளிக்க முடியவில்லை.

யாழ்.மாவட்டச் செயலகத்தின் ஊடாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் எனத் தெரிவிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் பெயர்ப் பட்டியல் கையளிக்கப்பட்டு அதனை பகிர்ந்தளிக்க முற்பட்ட போதே பிரச்சினைகள் ஏற்பட்டது.

ஐந்து நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்ற மக்களை விட்டுவிட்டு உடனடியாக வந்து பெருந்தொகை எரிபொருளை கேட்டதாலையே மக்களுக்கு எரிபொருளை உரிய முறையில் பகிர்ந்தளிக்க முடியவில்லை.

உண்மையில் செஞ்சிலுவைச் சங்கம் என்ற அடிப்படையில் மக்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கமாகும். அதனையே நாங்கள் தொடர்ந்தும் செய்வோம். எதிர்காலத்திலும் அவ்வாறு தான் செயற்படுவோம்.

அடுத்த முறை பெற்றோல் வருமாக இருந்தால் நாங்கள் நிச்சயமாக பொதுமக்களுக்குத் தான் வழங்க முடிவு செய்திருக்கின்றோம். இந்த முடிவை நிர்வாகக்குழு எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.