;
Athirady Tamil News

இளைஞர்களிடமுள்ள சமூக பொறுப்பின் வடிவமாகவே இன்றைய போராட்டங்கள் அமைந்துள்ளது : கல்முனை மாநகர பிரதி முதல்வர்!!

0

எமது நாட்டில் இன்றைய ஜனாதிபதி யார்?, பிரதமர் யார்? நாட்டின் நிர்வாகம் யார் கையில் இருக்கிறது என்று தெரியாத நிலையிலையே இலங்கையர்களாகிய நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அப்படியான குழப்ப நிலை எமது நாட்டில் நிலவி வருகிறது. இந்த நிலை மாறி இதிலிருந்து விடுதலை பெற்று நமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். நாட்டை ஊழலிலிருந்து விடுதலை செய்து மீட்க வேண்டும் என நினைத்து இளைஞர்கள் வீதிக்கு இறங்கி போராடிவருகிறார்கள். இளைஞர்களுக்கு நிறைய குடும்ப பொறுப்பு இருக்கிறது. அதன் அடுத்த கட்டமாக சமூக பொறுப்பும் இருக்கிறது. அந்த சமூக பொறுப்பின் வடிவமாகவே இன்றைய போராட்டங்கள் அமைந்துள்ளதாக நான் பார்க்கிறேன். என கல்முனை மாநகர பிரதிமுதல்வரும் ரஹ்மத் மன்சூர் பௌண்டசனின் ஸ்தாபக பணிப்பாளருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.

புதன்கிழமை இரவு சாய்ந்தமருதில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, இளைஞர்களின் சக்தியை வழிகெடுக்க பல்வேறு சக்திகள் பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை செய்து வருகிறார்கள். அதில் போதைப்பொருள் முக்கிய இடம் வகிக்கிறது. போதைப்பொருள் பாவனை சுயமரியாதை, குடும்ப கௌரவத்தை மட்டுமின்றி தலைமுறைதாண்டிய அழிவை ஏற்படுத்த கூடியது. விளையாட்டு வீரன் ஒருவன் இந்த செயலில் இறங்கமாட்டான். விளையாட்டு உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரக்கூடியது. அதனால் விளையாட்டு எல்லோருக்கும் அவசியமாகிறது.

இன்றைய இளைஞர்கள் பெரியோர்களுக்கு வழிகாட்டியாக மாறியிருக்குக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே நாட்டில் மாற்றம் வேண்டி போராடும் போராட்ட இளைஞர்கள் எமது அரசியல்வாதிகளுக்கு நாட்டை எப்படி கொண்டுசெலுத்த வேண்டும் என்று பாடம் எடுத்து கேள்விகேட்டதை காண்கிறேன். சரியான பாதையில் சமூகத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும். இன்றைய காலத்தில் தொழிநுட்பம் வளர்ந்துள்ளது. அதில் இருக்கும் தீமைகளை தவிர்த்து நல்லவைகளை எடுத்து அதனூடாக நாம் நம்மை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். வேறு எங்கோ நடக்கும் விடயங்களை நாம் இங்கிருந்து பல்வேறு ஊடகங்களின் வாயிலாக காண்கிறோம். சமூக வலைத்தளங்களை முறைகேடாக பயன்படுத்தக்கூடாது. விளையாட்டினூடாக இளைஞர்களிடம் மாற்றத்தை கொண்டுவருவதற்காக பிரதேச விளையாட்டுத்துறையை மேம்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

கொரோனாவினால் 02 வருடங்கள் நாங்கள் முடங்கிவிட்டோம். இப்போது பெற்றோல், அத்தியாவசிய பொருட்கள் என எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்கும் முக்கியமான காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையிலிருந்து விடுபட்டு இலங்கையர்களின் எதிர்காலம் பிரகாசமாக அமைய இறைவனின் ஆசிர்வாதத்துடன் நிலையான ஒழுங்கான அரசியல்மாற்றம் இப்போது அவசியமாகிறது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.