;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு அபார வெற்றி: 25-ந் தேதி பதவி ஏற்கிறார்..!!

0

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி. இந்தியாவின் முதல் குடிமகன் நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவரே. இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது அலங்கரிப்பவர், ராம்நாத் கோவிந்த். 14-வது ஜனாதிபதியான அவரது பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடத்த தேவை ஏற்பட்டால், ஜூலை 18-ந்தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்கா இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி தனது ஆளுமையை நிரூபிக்க மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்தது. இதற்காக ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்முவை (வயது 64) வேட்பாளராக களமிறக்கியது. அவரை ஆதரித்து பழங்குடியினருக்கு நியாயம் சேர்க்குமாறு எதிர்க்கட்சிகளையும் கேட்டுக்கொண்டது.

ஆனால் மத்திய அரசுக்கு எதிரான தங்கள் ஒற்றுமையை நிரூபிக்கும் வகையில் களமிறங்கிய எதிர்க்கட்சிகளோ, பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்தன. இதற்காக பல்வேறு தலைவர்களின் பெயரை பரிசீலித்து, கடைசியில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவை இறுதி செய்தன. தேர்தல் நடந்தது இந்திய ஜனாதிபதியை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்வதால், இந்த மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை பெறுவதற்கு இரு அணியினரும் தீவிர களப்பணியாற்றினர். குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கிய திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா இருவரும் மாநிலங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர். இதன் தொடர்ச்சியாக கடந்த 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. எம்.பி.க்கள் வாக்களிக்க நாடாளுமன்றத்திலும், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க நாட்டின் 30 இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாடு முழுவதிலும் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை சுமார் 4,800 ஆக இருந்த நிலையில், இதில் 99 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

வாக்கு மதிப்பு வேறுபாடு

வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டன. அங்கு நாடாளுமன்றத்தின் 63-ம் எண் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. ஜனாதிபதி தேர்தலில் எம்.பி. ஒருவரின் வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம் எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேச எம்.எல்.ஏ. ஒருவரின் வாக்கு மதிப்பு 208 ஆகவும், தமிழ்நாடு, ஜார்கண்டில் தலா 176, மராட்டியத்தில் 175, மேற்கு வங்காளத்தில் 151 ஆகவும் உள்ளது. இவ்வாறு அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஒட்டுமொத்த ஓட்டுமதிப்பு 10 லட்சத்து மேல் உள்ளது. இதில் 50 சதவீதத்துக்கு மேல் பெறுபவர் தேர்தலில் வெற்றி வாகை சூடுவார். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி மேலும் சில கட்சிகள் என சுமார் 44 கட்சிகள் திரவுபதி முர்முவை ஆதரித்தன.

அத்துடன் வாக்குப்பதிவின்போதும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சில எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் அணி மாறி திரவுபதி முர்முவுக்கு வாக்களித்தனர். இதனால் அவருக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

வாக்கு எண்ணிக்கை

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்தில் நடந்த இந்த வாக்கு எண்ணிக்கையை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநிலங்களவை செயலாளருமான பி.சி.மோடி மேற்பார்வையிட்டார். இதில் முதல் சுற்றில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த 15 எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. பதிவான மீதமுள்ள 748 வாக்குகளில் 72 சதவீதம், அதாவது 540 ஓட்டுக்களை பெற்று திரவுபதி முர்மு முதலிடத்தை பெற்றார். இதில் எம்.பி. ஒருவரின் வாக்கு மதிப்பு 700 என்ற அடிப்படையில் அவர் பெற்றிருந்த வாக்கு களின் மதிப்பு 3,78,000 ஆகும்.

அதேநேரம் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்கா, 208 வாக்குகள் பெற்று 1,45,600 மதிப்பிலான வாக்குகள் பெற்றிருந்தார். எதிர்க்கட்சிகளை சேர்ந்த 17 எம்.பி.க்கள் திரவுபதி முர்மு வுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்ந்து முன்னிலை

பின்னர் ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி மாநிலங்களில் பதிவான எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் முதலில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த மாநிலங்களில்மொத்தமுள்ள 1,138 எம்.எல்.ஏ.க்களில், 809 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு திரவுபதி முர்முவுக்கு கிடைத்தது. இவற்றின் மதிப்பு 1,05,299 ஆகும். இதன் மூலம் அவரது முன்னிலை நீடித்தது. மறுபுறம் 44,276 மதிப்புடன் 329 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை பெற்றிருந்த யஷ்வந்த் சின்கா 2-வது இடத்திலேேய நீடித்தார். ஆந்திராவை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அருணாசல பிரதேசத்தில் 4 பேரை தவிர மீதமுள்ள அனைவரும் திரவுபதி முர்முவை ஆதரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

64 சதவீத வாக்குகள்

இதைத்தொடர்ந்து அடுத்த 10 மாநிலங்கள் அடங்கிய 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த சுற்றிலும் 3-ல் இரண்டு பங்குக்கு அதிகமான வாக்குகளை பெற்ற முர்மு 5,77,777 மதிப்புடைய வாக்குகளுடன் வெற்றிக்கான 50 சதவீதத்துக்கு அதிகமான இலக்கை கடந்தார். 3-வது சுற்றிலேயே 53 சதவீத ஓட்டுகளை அவர் பெற்று விட்டதால், இந்த சுற்றிலேயே முர்முவின் வெற்றியும் உறுதியானது. பின்னர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான வாக்குகள் இறுதி சுற்றில் எண்ணப்பட்டன. இந்த சுற்றிலும் அதிகமான வாக்குகள் பெற்ற திரவுபதி முர்மு ஜனாதிபதி தேர்தலில் அபார வெற்றி பெற்றார். அந்தவகையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, 64 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிக்கனியை பறித்துக்கொண்டார். அவர் மொத்தம் 6,76,803 வாக்குகள் பெற்றிருந்தார். அதேநேரம் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு 3,80,177 வாக்குகள் கிடைத்தது. இதை தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

முதல் பழங்குடியின ஜனாதிபதி

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார். பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை இதன் மூலம் அவர் பெறுகிறார். மேலும் நாடு விடுதலைக்குப்பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் திரவுபதி முர்முவையே சாரும். 3-வது சுற்றிலேயே முர்முவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதால், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்கா தனது தோல்வியை ஒப்புக்கொண்டு முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ராம்நாத் கோவிந்த், மோடி வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்தவகையில் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதைப்போல பிரதமர் மோடி, முர்முவின் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்தினார். மேலும் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ராகுல்காந்தி

மத்திய மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத் (உ.பி.), மம்தாபானர்ஜி (மேற்குவங்காளம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்) , தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.