;
Athirady Tamil News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு..!!

0

கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகள் ெவள்ளத்தில் தத்தளித்தன. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. நேற்று முன்தினம் அந்த அணைகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பாகினா பூஜை நிறைவேற்றினார். இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதன்காரணமாக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை நிலவரப்படி 124.62 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 21,875 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 18,073 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று முழு கொள்ளளவில் தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,765 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10,063 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 28,133 கனஅடி தண்ணீர் காவிரியில் தமிழகத்துக்கு செல்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.