;
Athirady Tamil News

பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண்: ஜனாதிபதியாக முர்மு பதவி ஏற்றார் -தலைவர்கள் வாழ்த்து..!!

0

இந்திய திருநாட்டின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் திரவுபதி முர்மு (வயது 64). திரவுபதி முர்மு தேர்வு ஒடிசாவின் சந்தால் பழங்குடியின குடும்பத்தில் பிறந்து நாட்டின் மிகப்பெரிய பதவியை அலங்கரித்துள்ள அவர், கடந்த 18-ந்தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த திரவுபதி முர்முவை, எதிர்க்கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பலரும் ஆதரித்து இருந்தனர். இதனால் எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்காவை விட சுமார் 3 லட்சம் அதிக வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றிருந்தார்.

காந்தியடிகள் நினைவிடத்தில் மரியாதை

நாட்டின் 14-வது ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில், புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நேற்று பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் மும்முரமாக நடந்து வந்தன.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக திரவுபதி முர்மு நேற்று காலையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்காட் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஜனாதிபதி மாளிகை சென்று ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அவரை ராம்நாத் கோவிந்த் குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஜனாதிபதியாக பதவி ஏற்றார்

இதைத்தொடர்ந்து ராம்நாத் கோவிந்துடன், திரவுபதி முர்மு நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அங்கு அவர்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய மந்திரிகள் வரவேற்றனர். பின்னர் தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. இதில் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து உறுதிமொழி பதிவேட்டில் திரவுபதி முர்மு கையெழுத்து போட்டார். அப்போது 21 குண்டுகள் முழங்க புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இருந்த அனைவரும் கைகளை தட்டியும், மேஜைகளை தட்டியும் ஆரவாரம் செய்தனர். இதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு, ஜனாதிபதியாக தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

வெளிநாட்டு தூதர்கள்

இந்த பதவி ஏற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். மேலும் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், வெளிநாட்டு தூதர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல், சமூக அமைப்பு தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த சிறிய நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புதிய ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதியும் ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டனர். அப்போது மேளதாளம் இசைத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற 5-ம் எண் வாசலில் புதிய மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மெய்க்காவலர்கள் தேசிய வணக்கம் செலுத்தினர்.

முப்படைகளின் அணிவகுப்பு

ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வழி நெடுகிலும் குதிரைகளில் சீருடை அணிந்த வீரர்கள் அணிவகுத்து நின்றனர். ஜனாதிபதி மாளிகையை அடைந்ததும், திரவுபதி முர்முவுக்கு முதல் முறையாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதைப்போல முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரியாவிடையும் அளிக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகளும், ஜனாதிபதி மாளிகை ஊழியர்களும் கலந்து கொண்டனர். இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று உள்ள திரவுபதி முர்மு முதல் பழங்குடியின ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி மற்றும் நாடு விடுதலைக்கு பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பல்வேறு சிறப்புகளை பெற்று உள்ளார். இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றதை அவரது சொந்த ஊரில் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் ஒடிசா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இத்தகைய கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.

பிரதமர் மோடி வாழ்த்து

மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான ஒடிசாவின் மயூர்ப்கஞ்சில் இருந்து முதல் குடிமகன் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ள அவரை பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி உள்ளனர். அந்த வகையில், ‘நாட்டின் முதல் குடிமகளாக வெற்றிகரமான பதவிக்காலம் அமைய வாழ்த்துகள்’ என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், ‘இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு ஜி பதவி ஏற்றதை ஒட்டுமொத்த தேசமும் பெருமிதத்துடன் பார்த்தது. அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றது இந்தியாவுக்கு, குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான தருணம். அவரது ஜனாதிபதி பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். உள்துறை மந்திரி அமித்ஷா தனது வாழ்த்து செய்தியில், ‘ஜனநாயக மதிப்பீடுகளைப் பின்பற்றும் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரமளித்தல் மற்றும் ‘அந்தோதயா’ என்பதற்கு இன்றைய வரலாற்று நாள் ஒரு அற்புதமான உதாரணம்’ என்று பெருமிதம் வெளியிட்டு உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர்கள்

பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் பலரும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மேலும் பல்வேறு எதிர்க்கட்சித்தலைவர்களும் நாட்டின் புதிய முதல் குடிமகளை வாழ்த்தி உள்ளனர். அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், இந்திய வரலாற்றில் இது ஒரு பெருமித தருணம் என பாராட்டியுள்ளார். இதைப்போல தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள் என ஏராளமானோர் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

ஜின்பிங் வாழ்த்து

இந்தியாவை கடந்து பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்தும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்தவகையில், சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவும், சீனாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான அண்டை நாடுகள். ஒரு ஆரோக்கியமான மற்றும் நிலையான சீனா-இந்தியா உறவானது இரு நாடுகளின் அடிப்படை நலன்களுக்கும், பிராந்தியத்திலும் உலகெங்கிலும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கும் உகந்தது’ என குறிப்பிட்டு இருந்தார். மேலும் இரு நாட்டு பரஸ்பர அரசியல் நம்பிக்கைக்கும், ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் முர்முவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.

விளாடிமிர் புதின், ரணில் விக்ரமசிங்கே

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவுடனான உறவுகளுக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். நமது நட்பு நாடுகளின் நலனுக்காகவும், வலுவான சர்வதேச நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களுக்காகவும், அரசின் தலைவராக உங்கள் (முர்மு) செயல்பாடுகள் ரஷிய-இந்திய அரசியல் மற்றும் பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும்’ என்று நம்பிக்கை வெளியிட்டு உள்ளார். இலங்கை புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ‘மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் தலைமை பொறுப்புக்கு நீங்கள் நியமிக்கப்பட்டிருப்பது, உங்கள் திறமை மற்றும் அரசியல் ஞானத்தின் மீது அரசும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கைக்கு சாட்சி’ என்று பாராட்டி உள்ளார். இதைப்போல மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சொலி, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதமர் ஷேர் பகதூர் தூபா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.