;
Athirady Tamil News

பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

0

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையின் கீழ் முதல்-அமைச்சர் அழைப்பு மையமும் (சி.எம். கால் சென்டர்) செயல்படும் என்றும், 1100 என்ற எண்ணில் பொதுமக்கள் அனைத்துவிதமான புகார்களையும் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்-அமைச்சர் அழைப்பு மையம் சென்னை சோழிங்கநல்லூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் இந்த மையத்துக்கு ஏராளமானோர் தொடர்புகொண்டு தங்கள் புகார்களை தெரிவித்து, தீர்வு கண்டு வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு இந்தநிலையில் இந்த அழைப்பு மையத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென வந்தார். அவருடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ‘முதல்வரின் முகவரி’ துறையின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்டோரும் வந்தனர்.

இந்த மையத்தின் செயல்பாடுகள், பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மையத்தில் புகார்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது?, துறைகள் வாரியாக அந்த புகார்கள் எப்படி பிரித்து அனுப்பப்படுகிறது? தீர்வு காணப்பட்ட புகார்கள், நிலுவையில் உள்ள புகார்கள், அதற்கான காரணங்கள் என மையத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஷில்பா பிரபாகர் சதீஷ் விளக்கி கூறினார். புகார்களை பெற்று வியப்பூட்டினார் இதற்கிடையில் அழைப்பு மையத்தில் புகார்களை பெற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் பணியாளரிடம் அவரது பணி குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் புகார் அளிக்கும் பொதுமக்களுடன் தொலைபேசியில் தானே பேசவும் தொடங்கினார். இதனால் புகார் அளிக்க தொடர்புகொண்டவர்கள் ஒருகணம் திகைத்து போனார்கள். பின்னர் புகாரை தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனா். சிலர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். புகார் அளிக்க தொடர்புகொண்ட ஒவ்வொருவரிடமும் ‘நல்லா இருக்கீங்களா… என்ன செய்றீங்க…’ என்று உரிமையுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். வயது முதிர்ந்தவர்கள் பேசுகையில் மிகுந்த அக்கறையுடன் அவர்களை விசாரித்தார். இதனால் அவர்கள் அகமகிழ்ந்து போனார்கள்.

அதிகாரிகளுக்கு அடுக்கடுக்கான உத்தரவு \
இதையடுத்து தீர்வு கிடைக்காமல் இருக்கும் புகார்களின் கோப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு பெற்றார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொண்டு ‘ஏன் உங்கள் துறையில் புகார்களுக்கு தீர்வு காணப்படாமல் இருக்கிறது? என்ன காரணம்? விரைந்து நடவடிக்கை எடுங்கள்’ என்று உத்தரவிட்டார். அதேவேளை சிறப்பாக செயல்பட்டவர்களை பாராட்டவும் அவர் தயங்கவில்லை. ‘உங்களுக்கு கொடுத்த பணியை நல்லபடியாக செய்றீங்க… பாராட்டுகள். இது தொடரவேண்டும்’ என்று கூறினார். அதனைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டார். கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஆய்வு செய்ததுடன், தானே முன்வந்து புகார்களை கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.