;
Athirady Tamil News

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விவகாரம் தொடர்பான விவாதத்தால் மக்களவையில் பரபரப்பு..!!

0

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஷ்டிரபதி என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை, ஜனாதிபதியை அவமதிக்கிற விதத்தில் பயன்படுத்தினார். இந்த விவகாரம் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எதிரொலித்தது. இதையொட்டி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பிரச்சினை எழுப்பி பேசினார். அப்போது அவர், “ஆதிர் ரஞ்சன் சவுத்ரி , ஜனாதிபதி முர்முவை ராஷ்டிர பட்னி என கூறி அவமதித்து விட்டார். அவர் ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தை, பெண்களை, ஏழைகளை, நலிவுற்றோரை அவமதித்து விட்டார்” என சாடினார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார். நண்பகல் 12 மணிக்கு பின்னர் நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சோனியா காந்தி, ஆளும் கட்சி எம்.பி.க்கள் வரிசைக்கு சென்றார். பீகார் பா.ஜ.க. எம்.பி. ரமாதேவியிடம், “இந்த விவகாரத்தில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்?” என கேட்டார்.

அப்போது அங்கே மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி வந்து, சோனியா காந்தியை நோக்கி சைகை காட்டினார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் ஸ்மிரிதி இரானியின் எதிர்ப்பை சோனியா காந்தி புறக்கணிக்க முயற்சித்தார். ஆனால் ஏனோ திடீரென ஸ்மிரிதி இரானியை நோக்கி சோனியாவும் சைகை செய்து கோபமாக பேசினார். சோனியாவும், ஸ்மிருதி இரானியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதும், அவர்களை ஆளும் கட்சி எம்.பி.க்கள் சூழ்ந்ததும், பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதலால் ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டபோது சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலேயும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபரூபா பொத்தாரும் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச்சென்றனர். மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, “ஒரு பெண்ணாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதில் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களவையில் உள்ள அவரது சொந்தக் கட்சி தலைவர் அவமதித்ததற்காக நாட்டின் முன் அவர் வந்து, ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தினார். இதையடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, “இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக யாரும் அவமதிப்பாக பேசக்கூடாது. அத்தகைய கருத்துக்களை கூறுவது தவறு. இது ஏன் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இது தவறுதான்” என குறிப்பிட்டு பிரச்சினையை முடித்து வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.