;
Athirady Tamil News

’19 இல் இல்லாதவை 22 இல் உள்ளன’ !!

0

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்படாத பல ஜனநாயக பண்புகள் 22ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (2) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை 7 நாள்களின் பின்னர் பாராளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக முன்வைக்கப்படவுள்ளதாகவும் , இது 22ஆவது திருத்தம் என்றாலும் 21ஆவது திருத்தமாகவே கருதப்படும் என்றார். அடிப்படையில் 19ஆவது திருத்தமானது பல பலவீனங்களை கொண்டிருந்ததுடன், அவற்றை அடையாளம் கண்டு, அவற்றை நீக்கி 20ஆம் திருத்தத்தில் உள்ள சில நல்ல விடயங்களை இதில் உள்ளடக்கியுள்ளோம் என்றார்.

அரசியலமைப்பு பேரவைக்கு பாராளுமன்ற உறுப்பினர் மூவர் தெரிவு செய்யப்படும் போது பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் திருத்தம் செய்யப்பட்டு, அந்தந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய வங்கி ஆளுநரை நியமிப்பதற்கு முன்னர், அரசியலமைப்பு பேரவையின் அனுமதியை ஜனாதிபதி பெற வேண்டும்.

நிதிச் சபையில் உத்தியோகப்பூர்வமற்ற உறுப்பினர்களின் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி அவசியம். ஜனாதிபதி கட்டாயமாக பாதுகாப்பு அமைச்சு பதவியை வகிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் . உடரட்ட திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

19ஆவது திருத்தத்தில் உள்ள ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை முழுமையாக நீக்குமாறு எதிர்க்கட்சி பரிந்துரைத்தாலும் அதனை முன்னெடுக்க அரசியலமைப்பு ரீதியில் எமக்கு சந்தர்ப்பம் இல்லை. அவ்வாறு செய்ய வேண்டுமெனில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதே அதற்கான தீர்வு என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.