;
Athirady Tamil News

கல்முனையில் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை-மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் நடவடிக்கை!!

0

கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 01 கிலோ கிராம் மாட்டிறைச்சியின் அதிகூடிய விலையாக 1600 ரூபா கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுஇ கல்முனை மாநகர பிரதேசங்களில் ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி 2200 ரூபாவுக்கு மேல் விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைக் கவனத்தில் கொண்டுஇ மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் எதிர்வரும் சனிக்கிழமை (06)தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த நிர்ணய விலையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் புதன்கிழமை (03) மாநகர முதல்வரினால் மாநகர சபைக்கு நேரடியாக அழைக்கப்பட்டு, இறைச்சி வியாபாரத்தின்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் செலவீனங்கள் குறித்து கேட்டறியப்பட்டு, அவற்றுக்குரிய தீர்வுகள் முன்மொழியப்பட்ட நிலையில், அவர்களது இணக்கத்துடன் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 01 கிலோ கிராம் மாட்டிறைச்சி 1600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அதில் ஆகக்கூடியது 200 கிராம் மாத்திரமே முள் அடங்கியிருத்தல் வேண்டும் எனவும் அனைத்து இறைச்சிக் கடைகளிலும் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறும் மாட்டிறைச்சி வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மாட்டிறைச்சிக் கடைக்கான வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இறைச்சிக் கடைக்காரர்களுக்கு மாடுகளை விற்பனை செய்வோர் மாநகர சபையில் தம்மைப் பதிவு செய்து, அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஒரு கிலோ கிராம் இறைச்சியை ஆகக்கூடியது 1300 ரூபாப்படி வழங்க வேண்டும் எனவும் முதல்வரினால் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதனை மீறும் மாடு வியாபாரிகள் பொலிஸார் மூலம் கைது செய்யப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதுடன் மாடுகளும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி வியாபாரிகளுடனான இக்கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து முதல்வர் ஏ.எம்.றகீப் கருத்துரைக்கையில், அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பல பிரதேசங்களில் மாட்டிறைச்சியானது 1200 ரூபா, 1400 ரூபா தொடக்கம் 1600 ரூபா வரை விற்கப்படுகின்றபோது ஏன் கல்முனையில் மாத்திரம் 2200 ரூபாவுக்கு மேல் அநியாயமாக விற்பனை செய்கின்றீர்கள் என்று விசனம் தெரிவித்தார்.

மிகவும் கஷ்டமான இக்கால கட்டத்தில் எமது மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதில் இவ்வளவு கொள்ளை இலாபத்தை ஈட்டுவது மனச்சாட்சிக்கு விரோதமாகத் தெரியவில்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டு நிலைமையை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாளுக்கு நாள் உங்கள் இஷ்டம் போல் விலையைக் கூட்டிக்கொண்டு போவதை இனியும் அனுமதிக்க முடியாது. இறைச்சிக்கடைகளை இழுத்து மூட வேண்டியேற்பட்டாலும் பரவாயில்லை கொள்ளை இலாபத்தில் இறைச்சி விற்பதை அனுமதிக்க மாட்டேன் என்றும் தனது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தினார்.

மேலும், பொது மக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரிங்களுடனும் சில உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடனும் பேசிவிட்டே உங்களை இங்கு அழைத்திருக்கிறேன்.

ஆகையினால், மக்கள் நலன் கருதி இறைச்சியை ஓரளவாவது நியாயமான விலையில் விற்பனை செய்ய நீங்கள் முன்வர வேண்டும் என மாட்டிறைச்சி வியாபாரிகளிடம் இதன்போது முதல்வர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக மாட்டிறைச்சி வியாபாரிகள் சிலர் விளக்கமளிக்கையில், நாங்கள் மாடுகளை கொள்வனவு செய்வது தொடக்கம் அவற்றை அறுத்து விற்பனை செய்யும் வரையிலான பல்வேறுபட்ட செலவீனங்கள் பற்றி எடுத்துரைத்தனர். நாட்டு நிலைமை காரணமாக எல்லா செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில் எங்களுக்குக் கட்டுமான விலையில்தானே நாங்கள் வியாபாரம் செய்ய முடியும் என வாதிட்டனர்.

குறிப்பாக மாடு விற்பவர்கள், எங்களுக்கு ஒரு கிலோ கிராம் இறைச்சியை முள்ளுடன் சேர்த்து 1700 ரூபாவுக்கே தருகிறார்கள் எனவும் இதர செலவுகளை சேர்த்துப் பார்க்கும்போது இரண்டாயிரம் ரூபாவுக்கு குறைவாக எங்களால் இறைச்சியை விற்க முடியாதிருக்கிறது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் நுகர்வோர் எல்லோரும் தனி இறைச்சிதான் கேட்கிறார்கள், நாங்கள் முள்ளுடன் சேர்த்து 1700 ரூபாவுக்கு வாங்குவதை எப்படி குறைந்த விலையில் தனி இறைச்சியாக கொடுக்க முடியும்? இவைதான் எங்களுடைய முக்கிய பிரச்சினைகளாகும் என்று மேலும் சுட்டிக்காட்டிய வியாபாரிகள், இவற்றுக்கு தீர்வு பெற்றுத்தர முடியுமாக இருந்தால் நாங்கள் விலையை குறைப்பது குறித்து யோசிக்க முடியும் என்று முதல்வரிடம் தெரிவித்தனர்.

நுகர்வோரின் விலைவாசி குறித்து சிந்திக்காமல் நீங்கள் அதிக விலை கொடுத்து மாடுகளை வாங்குவதற்கு தயாராக இருப்பதால்தான் மாடு வியாபாரிகள், அவர்கள் நினைத்த விலைக்கு கொள்ளை இலாபம் வைத்து உங்களுக்கு விற்கின்றனர் என்று குறிப்பிட்ட முதல்வர், எவ்வாறாயினும் அவர்கள் விற்கின்ற 1700 ரூபாவை 1300 ரூபாவாக குறைத்துத் தருவதற்கு நான் உடனடி நடவடிக்கை எடுக்கின்றேன் எனவும் நீங்கள் நுகர்வோருக்கு ஆகக்கூடியது 1500 ரூபா அல்லது 1600 ரூபாவுக்காவது விற்பதற்கு முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

எங்களுக்கு மாடுகள், கிலோவொன்று 1300 ரூபாப்படி கிடைக்குமாயின், செலவுகள் போக சிறிது இலாபம் வைத்து 300 கிராமளவில் முள்ளுடன் சேர்த்த இறைச்சியை கிலோவோன்று 1600 ரூபாவுக்கு விற்பதற்கு நாங்கள் தயார் என மாட்டிறைச்சி வியாபாரிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்,

ஒரு கிலோவுக்கு, 300 கிராம் முள் என்பது அதிகமாகையினால் 200 கிராம் முள் சேர்ப்பதே ஓரளவு நியாயம் என எடுத்துரைத்த முதல்வர், இறைச்சி 800 கிராமும் முள் 200 கிராமும் என்றவாறு கண்டிப்பாக டிஜிட்டல் தராசில் நிறுக்கப்பட வேண்டும் என பணிப்புரை விடுத்தார்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.