;
Athirady Tamil News

நல்லூர் ஆபரணங்களுடன் வருவதை தவிருங்கள்!!

0

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் எனவும், திருட்டுக்களில் ஈடுபட வெளிமாவட்ட கும்பல்கள் ஊடுறுவி உள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே தெரிவித்தார்

யாழில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 1ஆம் திகதியில் இருந்து நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இடம்பெறுகின்றது. ஆலய வளாகத்தில் தேவையானஅளவு பாதுகாப்பு பொலிசாரினால் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு விசேட போலிஸ் அணியும் இங்கே வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

ஆனாலும், ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் அதிக மக்கள் கூடும் இடத்தில் திருட்டு சம்பவங்களும் இடம்பெறலாம். இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

திருட்டுச் சம்பவங்களை மேற்கொள்வதற்கு வெளி மாவட்டங்களிலிருந்து ஒரு சிலர் குழுக்களாக ஊடுறுவி இருக்கலாம். எனவே ஆலயத்திற்கு வருவோர் நகைகள் மற்றும் அதிக பணங்களை ஆலயத்திற்கு எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அத்தோடு திருட்டு சம்பவங்கள், திருட்டு சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிசாரிடம் உடனடியாக தெரியப்படுத்துங்கள்.

கடந்த வாரத்தில் யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் சில திருட்டுச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த சம்பவங்களை நாங்கள் விசாரணைகளை முன்னெடுத்த போது, பொதுமக்களின் அசண்டையீனத்தின் காரணமாக இந்த திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக தங்களுடைய வீடுகள் ஜன்னல்களை ஒழுங்காக பூட்டாமல் வெளியில் செல்லுதல், அல்லது பூட்டிவிட்டு திறப்பினை பாதுகாப்பில்லாத இடத்தில் வைத்தல் போன்ற சம்பவங்களால் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே பொது மக்கள் தமது உடமைகள் தொடர்பில் அதிக கவனமாக இருங்கள்.

அத்தோடு தற்போதைய காலகட்டத்தில் டெங்கு மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே கடந்த காலங்களில் போலீசாருக்கு மற்றும் சுகாதாரப் பிரிவினருக்கு பொது மக்கள் நீங்கள் ஒத்துழைப்பு வழங்கியதை போல தற்போது உள்ள நிலையிலும் பொலீசார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு நோய் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.