;
Athirady Tamil News

கர்நாடகத்தில் பட்ஜெட் திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவு..!!

0

பட்ஜெட் தாக்கல்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 3-வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் அவர் வீட்டில் இருந்தபடி அடிக்கடி காணொலி காட்சி மூலம் அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பசவராஜ்பொம்மை நேற்று பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடி மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் இருந்து அவர் விவரங்களை கேட்டு பெற்றார். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:- கர்நாடக பட்ஜெட் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் திட்ட பணிகளுக்காக கடந்த 4 மாதங்களில் ரூ.77 ஆயிரத்து 619 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 60 ஆயிரத்து 500 கோடி 4 மாதங்களில் செலவு செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இவற்றில் ரூ.52 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

பணிகளை தாமதிக்க கூடாது
அதன்படி கால்நடைத்துறையில் 33.64 சதவீதமும், போலீஸ் துறையில் 31.66 சதவீதமும், தொழிலாளர் நலத்துறையில் 24 சதவீதமும், சமூக நலத்துறையில் 21 சதவீதமும், தோட்டக்கலைத்துறையில் 23 சதவீதமும், கூட்டுறவுத்துறையில் 23 சதவீதமும், வருவாய்த்துறையில் 24 சதவீதமும், சிறிய நீர்ப்பாசனத்துறையில் 33 சதவீதமும், கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறையில் 17 சதவீதமும், நகர வளர்ச்சித்துறையில் 22 சதவீதமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் 20 சதவீதமும், சிறுபான்மை நலத்துறையில் 20 சதவீதமும், மின்சாரத்துறையில் 25 சதவீதமும், பள்ளி கல்வித்துறையில் 27 சதவீதமும் செலவு செய்யப்பட்டுள்ளன. திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டங்களை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பணிகளை தாமதிக்க கூடாது. மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் வளர்ச்சி பணிகளை ஆய்வு நடத்தி விரைவுப்படுத்த வேண்டும். இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.