;
Athirady Tamil News

நாடே ஒற்றுமையாக எதிர்த்து போராடியபோது ஆங்கிலேயர்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது – பிரியங்கா குற்றச்சாட்டு..!!

0

வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன் 80-வது ஆண்டு விழா நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிக்கை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நாம் நினைவுகூரும்போது, இந்திய சுதந்திரத்துக்காக லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் கொடுத்த விலையை மறக்கக்கூடாது. நமது பலத்துடன் சுதந்திரத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம். இந்த நாளில், அருணா ஆசிப் அலி தேசியக் கொடி ஏற்றினார். அவரது துணிச்சல்தான், சுதந்திர வேட்கையின் அடையாளம் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையாக போராடியபோது, அந்த போராட்டத்தை கைவிடுமாறு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் விடுத்தது. கொடிய அடக்குமுறைக்கு இடையே ஆங்கிலேயர்களை ஆதரித்தது. அனைத்து சாதி, மதம், இனத்தை சேர்ந்தவர்களும் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று ஒன்றுபட்டு குரல் கொடுத்தனர்.

போராட்டம் தொடங்கியவுடன், காந்தி, நேரு, படேல், மவுலானா அபுல்கலம் ஆசாத், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் அலுவலகங்கள் இடிக்கப்பட்டன. ஆனால், ‘வெள்ளையனே வெளியேறு’ என்று ஒட்டுமொத்த மக்களும் எழுப்பிய போர்க்குரல், வெள்ளையர்களை விரட்டியடித்தது. இந்தியா சுதந்திரம் பெற்றது என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:- 80 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்து கொண்டிருந்தது? காங்கிரஸ் தலைமையின் கீழ் நாடு தீவிரமாக போராடிக் கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ். அந்த போராட்டத்தை புறக்கணித்தது. ஆங்கிலேயர்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது. சியாம பிரசாத் முகர்ஜி, போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மற்றொரு புறத்தில், காந்தி, நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.