;
Athirady Tamil News

யாழில் நடைமுறையை மீறி அரச உத்தியோகஸ்தர்களுக்கு சிலிண்டர் – மாவட்ட செயலகத்திற்கு தொடர்பு இல்லையாம்.!!

0

யாழ்ப்பாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான எரிவாயு விநியோகத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கு தொடர்பு இல்லை என மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட 1650 எரிவாயு சிலிண்டர்களில் 1000 சிலிண்டர்களை யாழ்.மாவட்ட செயலகம் உள்ளிட்ட 21 திணைக்களங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மிகுதி 650 சிலிண்டர்களையே யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் ஊடாக பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

குறித்த விடயம் பலர் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பில் மாவட்ட செயலரிடம் கேட்ட போது ,

எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்ததமையால் , சிலிண்டர்களை பெற்று மக்களுக்கு விநியோகிக்க நாம் விரும்பவில்லை. ஏனெனில் விலை குறைக்கப்படும் என தெரியாது. பெரியளவில் விலை வீழ்ச்சி ஏற்பட்டால் , அதில் ஏற்படும் நட்டத்தினை யார் மீது சுமத்துவது என்ற பிரச்சனை இருந்தது.

அந்நிலையில் திணைக்களங்களின் நலன்புரி சங்கங்கள் ஊடாக திணைக்கள பணியாளர்கள் தமக்கான எரிவாயுவினை பெற்றுக்கொள்ள கோரிக்கைகளை முன் வைத்தது.

அதன் அடிப்படையில் அவர்களுக்கான சிலிண்டர்கள் இன்றைய தினம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்த போதிலும் மாவட்ட செயலகத்தில் விநியோகிக்க நான் அனுமதிக்கவில்லை.

ஏனைய திணைக்களங்கள் தொடர்பில் அந்த அந்த திணைக்கள தலைவர்களிடமே வினாவ வேண்டும்.

அதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மாதாந்தம் 60 ஆயிரம் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் இதுவரை 40 ஆயிரம் சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகுதியும் மிக விரைவில் வழங்கப்படும்

தினமும் யாழ்ப்பாணத்திற்கு 2 ஆயிரம் சிலிண்டர்களை எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவே எதிர்வரும் வாரத்தினுள் , யாழில் சிலிண்டர்கள் தாரளமாக பெற்றுக்கொள்ள கூடிய சூழல் ஏற்படும். அதன் பின்னர் நேரடியாக விநியோகஸ்தர்களே தமது வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்களை விநியோகிப்பார்கள் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் எரிவாயு சிலிண்டர்கள் பங்கீட்டு அட்டைக்கே பகிர்ந்தளிக்கும் நடைமுறையுள்ளது.

எரிவாயு சிலிண்டர்கள் தேவையானர்வர்கள் தமது கிராம சேவையாளர் ஊடாக பதிவினை மேற்கொள்ள வேண்டும். அவர்களில் “உ: அட்டை (உத்தியோகஸ்த குடுப்பம்) உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. ஏனையவர்களுக்கும் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டது.

அத்துடன் கிராம சேவையாளர்களிடம் பதிவினை மேற்கொண்ட சமூர்த்தி , வேறு உதவி திட்டங்கள் பெறுபவர்கள் உள்ளிட்ட வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கு சிலிண்டர் விநியோகிக்க கிராம சேவையாளர் பரிந்துரைக்கவில்லை. அவர்களில் பலர் எரிவாயு சிலிண்டர்களை பெற முடியவில்லை.

அதேவேளை கிராம சேவையாளர்களிடம் பதிவினை மேற்கொண்டு , கிராம சேவையாளரின் பரிந்துரையில் ,பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் கண்காணிப்பில் குடும்ப அட்டையில் பதிவுகளை மேற்கொண்டு சிலிண்டரை முதல் கட்டமாக பெற்ற பலர் இரண்டாம் கட்ட சிலிண்டர்களை பெற முடியவில்லை.

ஏனெனில் கிராம சேவையாளர் பிரிவில் பதிவினை மேற்கொண்டவர்களில் கிராம சேவையாளரால் பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் கட்டம் கட்டமாக சிலிண்டர் வழங்கப்பட்ட பின்னரே ,முதலில் பெற்றவர்களுக்கு சிலிண்டர்கள் பெற முடியும்.

இவ்வாறான நிலையில் யாழில் பலர் முதலில் பெற்ற சிலிண்டர் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்டம் பெற காத்திருக்கும் நிலையில் , யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ள சிலிண்டர்களில் 1650 சிலிண்டர்களில் 400 சிலிண்டர்களை மாவட்ட செயலக பணியாளர்களுக்கு ஒதுக்கியுள்ளமை மட்டும் அன்றி மேலும் 600 சிலிண்டர்களை யாழில் உள்ள ஏனைய 20 திணைக்களங்களும் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

கிராம சேவையாளரிடம் பதிவுகளை மேற்கொண்டு சிலிண்டருக்காக பலர் காத்திருக்கும் போது தன்னிச்சையாக 21 திணைக்கள பணியாளர்களுக்கு என 1000 சிலிண்டர்கள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை பலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.