;
Athirady Tamil News

கல்முனையில் மாட்டிறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்!!! (PHOTOS)

0

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை அமுல்படுத்துவது தொடர்பில் மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் மாடு விநியோகஸ்தர்களுடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட், மாநகர சபையின் கணக்காளர் எம்.எம்.ரியாஸ், கால்நடை வைத்திய அதிகாரி வட்டப்பொல உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாட்டிறைச்சியின் விலை முறையற்ற விதத்தில் அதிகரிக்கப்பட்டிருப்பதால், மக்கள் அதனைக் கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதை கருத்தில் கொண்டு, கடந்த 03ஆம் திகதி புதன்கிழமை மாட்டிறைச்சி வியாபாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து 01 kg மாட்டிறைச்சி (200g எலும்பு அடங்கலாக) 1600 ரூபாவுக்கும் தனி இறைச்சி 1800 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என முதல்வரினால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கடந்த 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாடு விநியோகஸ்தர்களுடனான கலந்துரையாடலிலும் இந்த நிர்ணய விலை குறித்து ஆராயப்பட்டிருந்ததுடன் மாடு விற்பனையின்போது முடியுமானவரை விலையை குறைத்து வழங்குமாறு முதல்வரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் கட்டுப்பாட்டு விலையை அமுல்நடத்துவதில் மாநகர சபைக்கும் இறைச்சிக் கடைக்காரர்களுக்குமிடையே இழுபறி காணப்பட்டு வந்தது. இதனால் பெரும்பாலான இறைச்சிக்கடைகள் 06ஆம் திகதி சனிக்கிழமை முதல் திறக்கப்படாமல் இருந்து வருகின்றன.

இந்நிலையில், மாட்டிறைச்சி வியாபாரிகளும் மாடு விநியோகஸ்தர்களும் இன்று ஒரே மேசைக்கு அழைக்கப்பட்டு, முதல்வர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போது நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களையடுத்து 01 kg மாட்டிறைச்சி (200g எலும்பு அடங்கலாக) 1700 ரூபாவுக்கும் தனி இறைச்சி 1900 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கும் கட்டாயம் டிஜிட்டல் தராசை பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனை மீறுவோரின் இறைச்சிக்கடை வியாபார உரிமம் இரத்து செய்யப்படும் என இதன்போது முதல்வரினால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.