;
Athirady Tamil News

14-வது துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜெகதீப் தன்கருக்கு என்னென்ன அதிகாரம்..!!

0

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய நமது நாட்டில் துணை ஜனாதிபதி பதவிதான், நாட்டின் 2-வது உயர்பதவி என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மேற்கு வங்காள மாநில கவர்னராக பதவி வகித்து வந்த ராஜஸ்தான் ‘ஜாட்’ இனத்தலைவர் ஜெகதீப் தன்கர் (வயது 71) களம் இறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா (80), பொது வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில், ஜெகதீப் தன்கர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்கரெட் ஆல்வாவை 346 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் உடனே வாழ்த்து தெரிவித்தனர்.

அவர் 11-ந் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் நடந்தன. பதவி ஏற்றார், ஜெகதீப் தன்கர் இந்த நிலையில், நேற்று காலையில் ஜெகதீப் தன்கர், ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணியளவில் புதிய துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. அங்கு வந்த ஜெகதீப் தன்கர், விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த முக்கிய பிரமுகர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றார். தொடர்ந்து அவர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் கமிஷன் வழங்கிய சான்றிதழ் வாசிக்கப்பட்டது. அதையடுத்து, ஜெகதீப் தன்கர் நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால் அவர் பதவிப்பிரமாணத்தை இந்தியில் எடுத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பதவிப்பிரமாண பதிவேட்டில் கையெழுத்திட்டார். அப்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடி, தலைவர்கள் வாழ்த்து இந்த விழாவில், பிரதமர் மோடி, பதவி நிறைவு செய்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற மாநிலங்களவையின் தலைவராகவும் செயல்படுவார். மாநிலங்களவை தலைவராகி உள்ள ஜெகதீப் தன்கரும், மக்களவை தலைவராக உள்ள ஓம் பிர்லாவும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வக்கீலாக இருந்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனு மாவட்டம், கிதானா கிராமத்தில் 1951-ம் ஆண்டு, மே மாதம் 18-ந் தேதி பிறந்தவர். சட்டம் படித்த இவர் முதலில் ராஜஸ்தான் ஐகோர்ட்டிலும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் தொழில் செய்தார். அரசியல் களத்தில் குதித்த இவர் முதலில் தேவிலாலால் ஈர்க்கப்பட்டு, ஜனதாதளம் கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சியின் சார்பில் 1989-91 ஆண்டுகளில் ஜூன்ஜூனு மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தார். அப்போது சிறிது காலம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை துணை மந்திரி பதவியும் வகித்துள்ளார்.

1991-2003 காலகட்டத்தில், நரசிம்மராவால் கவரப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். 1993-98 ஆண்டுகளில் ராஜஸ்தானில் கிஷான்கார் தொகுதி எம்.எல்.ஏ. பதவி வகித்தார். 2003-ம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்தார். அவர் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந் தேதி மேற்கு வங்காள கவர்னராக பதவி ஏற்றார். அவர் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் மோதல் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்து அவருக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். இந்த நிலையில்தான் சற்றும் எதிர்பாராத விதமாக அவர் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அதுவும் விவசாயியின் மகன் என அறிமுகப்படுத்தப்பட்டார். பல பேரது பெயர்கள் துணை ஜனாதிபதி பதவிக்கு அடிபட்டு வந்தநிலையில், ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையும் வியப்பில் ஆழ்த்தியது. அரசியல் சட்டத்தில் அறிவு பெற்றவர் ஜெகதீப் தன்கர், இந்திய அரசியல் சாசனத்தில் சிறப்பான அறிவு பெற்றிருப்பவர், நாடாளுமன்ற நடைமுறைகளை நன்கு அறிந்தவர். அவர் மாநிலங்களவையில் சிறந்த தலைவராக இருப்பார், தேசிய முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, அவர் சபை நடவடிக்கைகளை வழிநடத்துவார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

ஜெகதீப் தன்கர் தீவிரமான வாசிப்பாளர் ஆவார். விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். ராஜஸ்தான் ஒலிம்பிக் சங்க தலைவராகவும், ராஜஸ்தான் டென்னிஸ் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மனைவி சுதேஷ் தன்கர் ஆவார். இவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்த தம்பதியருக்கு கம்னா என்ற மகள் உள்ளார். மேலும், குல்தீப் தன்கர், ரன்தீப் தன்கர் என 2 சகோதரர்களும், இந்திரா தன்கர் என்ற சகோதரியும் உள்ளனர். விடைபெற்றார், வெங்கையா நாயுடு நேற்று முன்தினம் வரையில் துணை ஜனாதிபதி பதவி வகித்த வெங்கையா நாயுடு நேற்று விடைபெற்றார். அவர் வசிப்பதற்காக டெல்லியில் எண்.1 தியாகராஜ் மார்க்கில் உளள பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பங்களா இன்னும் தயாராகவில்லை. எனவே வெங்கையா நாயுடு, ஐதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றார். துணை ஜனாதிபதிக்கு என்ன அதிகாரம்? நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன என்பது பற்றிய ஒரு பார்வை இது:- * துணை ஜனாதிபதி பதவி, நாட்டின் 2-வது உயரிய பதவி ஆகும். மரணம், ராஜினாமா, நீக்கம் போன்ற சூழலில் ஜனாதிபதி பதவி காலியாகிறபோது, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறவரையில், துணை ஜனாதிபதிதான் தற்காலிக ஜனாதிபதி ஆக பொறுப்பேற்பார். இந்த கால கட்டத்தில் ஜனாதிபதி பதவிக்கான அனைத்து அதிகாரங்கள், சலுகைகள், சம்பளம், அலவன்சுகள் உண்டு. ஆனால் அவர் மாநிலங்களவை தலைவராக பணியாற்றவோ அதற்கான சம்பளம், அலவன்சுகளையோ பெற முடியாது. * துணை ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுக்காலம்தான் என்றாலும் கூட, பதவிக்காலம் முடிந்தாலும் புதிய துணை ஜனாதிபதி பதவி ஏற்கிறவரை, இவர் பதவியில் தொடரலாம். * துணை ஜனாதிபதிதான் மாநிலங்களவை தலைவர் என்ற வகையில், அந்த சபையை நடத்துவது தொடர்பான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உண்டு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.