;
Athirady Tamil News

கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான விளைவினை அனுபவிக்கின்றார்!! (படங்கள், வீடியோ)

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தமையினால் சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து திரிகின்றவர்களாக இருக்கின்றார்கள்.எந்தவொரு நாட்டிலும் அவருக்கான புகழிடம் மறுக்கப்படுகின்ற நிலைமை தொடர்கின்றது.இனப்படுகொலைக்கான விளைவினை இன்று அவர் அனுபவிக்கின்றார் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை(12) மாலை அகம் மனிதபிமான வள நிலையம்(AHRC) சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் (PCCJ) அமைப்பின் ஏற்பாட்டில் வீரமுனை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்ட வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

படுகொலைகளுக்கு காரணமானவர்கள் இந்த நாட்டில் இருந்து தப்பி ஓடி வருகின்றார்கள்.முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கூட நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து திரிகின்றவர்களாக இருக்கின்றார்கள்.

எந்தவொரு நாட்டிலும் அவருக்கான புகழிடம் மறுக்கப்படுகின்ற நிலைமை தொடர்கின்றது.இதற்கெல்லாம் காரணம் எமது தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தமையினால் ஆகும்.அதற்கான விளைவினை இன்று அவர் அனுபவிக்கின்றார்.அன்று முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அதனால் தான் இன்று சிங்கள மக்களும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.காலிமுகத்திடலில் இன்று சடலங்கள் கரையொதுங்கும் நிலை காணப்படுகின்றது.சிங்கள மக்கள் கூட இன்று பயந்து நடுங்குகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.அன்று தமிழ் மக்கள் அனுபவித்த துயரத்தை தற்போது சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை இந்த நாட்டில் உருவாகியுள்ளது.எனவே தான் தமிழையும் தமிழ் தேசியத்தையும் என்றும் நாம் நேசிக்கின்றவர்களாகவே இருக்கின்றோம் என்றார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வீரமுனையில் இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வீரமுனையில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் வீரமுனையில் ஆலயத்திற்குள் புகுந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 55 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக 32 ஆவது வருடம் தொடர்ச்சியாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சதிகாரர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்.எதிர்கால சந்ததிக்கு இதனை எடுத்தியம்பும் பிரகாரத்தில் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் நினைவேந்தலை நடத்தி வருகின்றோம் என கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.