;
Athirady Tamil News

‘களைக்கொல்லிக்கு’ இலங்கையில் மீண்டும் அனுமதி – முன்பு தடை, இப்போது ஒப்புதல் ஏன்? (படங்கள்)

0

சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்குக்குக் காரணமானது எனக்கூறி – தடை செய்யப்பட்டிருந்த ‘கிளைபொசேட்’ (Glyphosate) எனும் களை நாசியை இறக்குமதி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் இலங்கை அரசு மீளவும் அனுமதி வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் வெளியான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, இம்மாதம் 05ஆம் தேதியிலிருந்து மேற்படி களை நாசினிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிளைபொசேட் இறக்குமதிக்கு – பூச்சிக்கொல்லி பதிவாளரின் பரிந்துரையின் கீழ், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமத்தை வழங்குவார் எனவும் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், சில மாவட்டங்களில் கிளைபொசேட் பயன்பாட்டுக்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதன்படி அனுராதபுரம், பொலன்நறுவை, குருணாகல், மொனராகலை மற்றும் பதுளை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கிளைபொசேட் (Glyphosate) தடைசெய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டு இந்தத் தடையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. கிளைபொசேட் நாசினிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் தேயிலை மற்றும் ரப்பர் செய்கையின்போது இதைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது.

பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளுமாறு அரசு அறிவித்ததைத் அடுத்து, கிளைபொசேட் உள்ளிட்ட ரசாயன நாசினிகள் மற்றும் யூரியா உரம் போன்றவற்றுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டது.

சிறுநீரக நோய் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு கிளைபொசேட் (Glyphosate) காரணமாக அமைகிறது என்று அதைத் தடை செய்தபோது அரசு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கமத்(விவசாயம்) தொழில் அமைச்சு 2015ஆம் ஆண்டு வெளியிட்ட எழுத்து மூல செயலாற்றுகை அறிக்கைக்கு அப்போதைய கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வழங்கிய செய்தியில், “விவசாய செய்கை பிரதேசங்களில், பரவலாகப் பரவி வரும் சிறுநீரக நோய் தொடர்பில் பலதரப்பட்ட தரப்பினர்கள் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில், இவ்விடயம் தொடர்பில் இந்த வருடத்தில் மிக முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டது. அதாவது, விவசாயச் செய்கையின் போது பரவலாகப் பாவிக்கும் கிளைபொசெட் களை நாசினி இறக்குமதி முற்றாகத் தடைசெய்யப்பட்டதே அத்தீர்மானமாகும். எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி, எடுக்கப்பட்ட மிக முக்கியமானதும் உறுதியானதுமான இந்தத் தீர்மானம் மக்களின் வரவேற்புக்கு உட்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த களைக்கொல்லிக்கான தடையையே – தற்போது ரணில் அரசாங்கம் நீக்கியுள்ளது.

கிளைபொசேட் (Glyphosate) உள்ளடங்கிய மேற்படி நாசினி, ‘தெரிந்தழியா’ அல்லது ‘சர்வ’ களை கொல்லி வகையைச் சேர்ந்ததாகும். ‘ரவுண்டப்’ எனும் வர்த்தகப் பெயரில் இலங்கையில் அறியப்பட்ட இந்தக் களைக்கொல்லி, நெற்செய்கையின் போது – உழவுக்கு முன்னர் நிலத்துக்கு விசிறப்படுகிறது. இதனால் அனைத்து வகை களைகளும் இறந்து போகும்.

இந்த நிலையில், கிளைபொசேட் (Glyphosate) களை நாசினிக்கான தடை நீக்கப்பட்டமை மகிழ்ச்சியான விடயம் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சரிபுடீன்.

கிளைபொசேட் தடைசெய்யப்பட்ட பின்னர், நெல் வயல்களில் பண்டிச் சம்பா (நெற் பயிர் போன்றது) கிலுகிலுப்பான் மற்றும் முட்டைச் சல்லு போன்ற களைகளின் பெருக்கம் அதிகரித்து விட்டதாகவும் இதனால் நெல் விளைச்சல் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

கிளைபொசேட் தடைசெய்யப்பட்ட காலத்தில், தமது நெல் வயல்களில் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகக் கூறும் சரிபுடீன், “நிலத்தில் அதிக தடவை உழவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதோடு, கூலியாட்களைக் கொண்டு களையெடுக்க வேண்டியிருந்தது” எனவும் குறிப்பிட்டார். இதனால், தமக்கு அதிக செலவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

கிளைபொசேட் தடைசெய்யப்பட்டதை அடுத்து, அதற்குப் பதிலீடாக விவசாயிகள் ‘சர்ஃப் எக்செல்’ (Surf excel) சலவைத் தூளுடன் யூரியாவை கலந்து பயன்படுத்தியதாக சரிபுடீன் கூறினார். அதேபோன்று ‘அஜினோமோட்டோ’வுடன் (Ajinomoto) எம்சிபிஏ எனும் களை நாசினியைக் கலந்து பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

“வயலை அண்டியும் வாய்க்காலிலும் அதிகளவு புற்கள் வளரும் போது, அங்கு பாம்புகள் மற்றும் அபாயகரமான பூச்சி வகைகள் காணப்படும். அதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டது. கிளைபொசேட் தெளிக்கும் போது மேற்சொன்ன இடங்களிலுள்ள புற்கள் முற்றாக அழிந்து விடும். பாம்பு, பூச்சிகளின் தொல்லையும் இருக்காது” எனவும் சரிபுடீன் தெரிவித்தார்.

இதேபோன்று, களைகளின் பெருக்கத்தால் தனது வயலில் நெல் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக, அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ. பிர்தௌஸ் கூறுகின்றார்.

“பண்டிச் சம்பாவை கட்டுப்படுத்துவதற்கு கிளைபொசேட் சிறந்த களை நாசினி. இது தடைசெய்யப்பட்டதை அடுத்து, பண்டிச் சம்பாவின் பெருக்கம் அதிகரித்தது. இதனால் சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு 40 தொடக்கம் 45 மூடைகள் விளையும் எங்கள் வயலில், இம்முறை 21 மூடைகளே கிடைத்தன” என்கிறார்.

56 வயதுடைய பிர்தௌஸ் – அவரின் 12ஆவது வயதிலிருந்து விவசாயத்தில் ஈடுபடுவதாகவும் 13 வருடங்கள் ‘வட்டானை’யாக (நெற் காணிகளை கண்காணிப்பவர்) கடமையாற்றி வருவதாகவும் கூறுகின்றார்.

மறுபுறமாக, கிளைபொசேட் (Glyphosate) பயன்படுத்தும் போது சில பாதகங்கள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கிளைபொசேட் பிரயோகிக்கும் போது அனைத்து விதமான களைகளும் புற்பூண்டுகளும் அழிவடைவதால், விலங்குகளுக்குத் தேவையான புற்கள் கூட அழிந்து போகும் நிலை ஏற்படும் என்று இப்பகுதியிலுள்ள விவசாயி ஏ.எம். நளீம் குறிப்பிடுகின்றார்.

அனைத்து களைகளுக்கும் பயன்படுத்துவது உசிதமல்ல

கிளைபொசேட் களைக்கொல்லிக்கான தடை நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் – பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிடுகையில், தடை நீக்கப்பட்ட போதிலும் அதை மட்டுப்பாட்டுடன் பயன்படுத்துமாறு கூறினார்.

“கிளைபொசேட் களைக்கொல்லியில் காட்மியம், ஆர்சனிக் போன்ற பார உலோகங்கள் உள்ளன. இவை நிலத்தடி நீருடன் சேரும். மண்ணின் கட்டமைப்பையும் இவை மாற்றக் கூடியவை. இதனால்தான் இது தடைசெய்யப்பட்டது” என அவர் விவரித்தார்.

“பார உலோகங்கள் சிறுநீரக நோயை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ஆனால், கிளைபொசேட் இல்லாமல் பயிர் செய்கையில் – புல்லைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இதைப் பயன்படுத்த வேண்டும்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

களைகளை இலகுவாகக் கட்டுப்படுத்துவதற்கு கிளைபொசேட் பயன்படுவதால் விவசாயிகள் இதை வரவேற்கின்றனர் எனக் கூறும் அவர், இந்த களைக்கொல்லியை அபரிமிதமாகப் பயன்படுத்தாமல் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது சிபாரிசு செய்யப்பட்ட அளவில், தேவையான போது மட்டும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இல்லாவிட்டால் சிறுநீரக நோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் எச்சரித்தார்.

“கிழங்கு வகைக் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு கிளைபொசேட் களைக்கொல்லியைப் பயன்படுத்தலாம். மாறாக சிறிய வகைக் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இதைப் பயன்படுத்துவது உசிதமானதல்ல,” எனவும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கலீஸ் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.