;
Athirady Tamil News

அரசாங்க உத்தரவாத விலையில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஊடாகவும் வவுனியாவில் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை!! (படங்கள்)

0

அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் சிறுபோக நெல்லை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாகவும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் இந்திரா ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட கூட்டுறவுச் திணைக்கள கேட்போர் கூடத்தில் உதவி ஆணையாளர் தலைமையில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று மாலை (18.08) இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலின் போது சிறுபோக நெற்செய்கை இடம்பெற்று வருகின்ற போதும் அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விட குறைவான விலையில் அரிசி ஆலை உரிமையாளர்களால் நெல் கொள்வனவு செய்யப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விட்டனர்.

இதன்போது, விவசாயின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியா வடக்கு பல நோக்கு கூட்டறவுச் சங்கத்திடம் இயங்கு நிலையில் அரிசி ஆலை இருப்.பதால் அச் சங்கத்தின் ஊடாக நெல் கொள்வனவு செய்யவுள்ளதாகவும், அதற்காக 10 மில்லியன் ரூபாய் நிதியை வழங்குமாறும் மாவட்ட அரச அதிபர் ஊடாக கோரியுள்ளதாகவும், ஏனைய பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகவும் நெல்லை கொள்வனவு செய்ய பொருத்தமான பொறிமுறை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், நிதிப் பிரச்சனை காணப்படுவதாகவும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் இந்திரா ரூபசிங்க மேலும் தெரிவித்தார்.

இதன்போது, விவசாய அமைப்புக்களிடம் இருக்கும் பணத்தை நெல் கொள்வனவுக்காக கடன் அடிப்படையில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு வழங்குவதாகவும் அதனை பின்னர் மீளச் செலுத்துமாறும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில், வவுனியா மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் செல்லத்தம்பி சிறிதரன், கமாக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.