;
Athirady Tamil News

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையில் கர்நாடகாவின் முதோல் வேட்டை நாய்கள்..!!

0

கர்நாடக மாநிலத்தின் பாகல் கோட்டை மாவட்டம் முதோல் வட்டத்தில் உள்ள பாரம்பரிய நாட்டு நாய்கள் முதோல் நாய்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கு கேரவன் நாய் அல்லது மராத்தா இன வேட்டை நாய் என்ற பெயர்களும் உள்ளன. கூர்மையான பார்வையும், வேட்டையாடும் திறனும் கொண்ட இந்த நாய்களை மராட்டிய மன்னர் சிவாஜியும், பாகல்கோட்டை மன்னர் கோர்படாவும் தங்களது படையில் போருக்காக பயன்படுத்தியுள்ளனர். 2017-ம் ஆண்டில் முதோல் இன வேட்டை நாய்கள் இந்திய பாகிஸ்தான் எல்லையை கண்காணிப்பதற்காக ராணுவத்திலும் சேர்க்கப்பட்டன. இந்திய விமானப் படையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக முதோல் இன வேட்டை நாய்கள், படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசும் போது நமது நாட்டு நாய்களைப் பற்றிக் குறிப்பிட்டார். நாட்டு நாய்கள் மூர்க்கத்தன்மை, மோப்பம் பிடிக்கும் திறன், சுறுசுறுப்பு, வேட்டையாடும் வேகம், தெளிவான பார்வை போன்றவற்றில் சிறந்து விளங்குகிறது. மன்னர்கள் வேட்டைக்குச் செல்லும் போது நாட்டு நாய்களை உடன் அழைத்துச் சென்றுள்ளனர். இவை பார்ப்பதற்கு தமிழகத்திலுள்ள சிப்பிப்பாறை வகை நாய்களைப் போலவே காணப்படும். இந்த முதோல் வகை நாய்கள் வேட்டை, மோப்பம் பிடித்து ஆட்களை அடையாளம் காண வெகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்த வகை நாய்களை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகல்கோட்டை மாவட்டம் திம்மாப்பூர் அருகே முதோலில் அமைந்துள்ள கேனைன் ரிசர்ச் அன்ட் இன்பர்மேஷன் சென்டரிலிருந்து (சிஆர்ஐசி) 2 நாய்க்குட்டிகளை சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் வாங்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிஆர்ஐசி இயக்குநர் சுஷாந்த் ஹண்டே கூறுகையில், சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர். முதோல் நாய்களின் செயல்திறனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து பயிற்சி அளிப்பதற்காக 2 குட்டிகளை வாங்கிச் சென்றனர். ஏற்கனவே இந்திய ராணுவம், விமானப்படை, துணை ராணுவப் படைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), மாநில காவல்துறை, வனத்துறை அதிகாரிகளும் இந்த வகை நாய்களின் செயல்திறனைக் கண்டு வாங்கிச் சென்றுள்ளனர் என்றார். சிஆர்ஐசி அமைப்பு கர்நாடக கால்நடை, விலங்குகள் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தின் இயக்குநர் பி.வி.சிவப்பிரகாஷ் கூறும்போது, “தூரத்தில் கேட்கும் சிறு சத்தத்தைக் கூட இந்த வகை நாய்கள் கேட்டு மோப்பம் பிடிக்க ஆரம்பித்துவிடும். மேலும் அதிக வேகத்தில் ஓடி வேட்டையாடும். மிகவும் உயரமான வேலி, மதில் சுவர்கள் போன்றவற்றைக் கூட தாண்டிக் குதிக்க வல்லவை. மற்ற நாய் வகையுடன் ஒப்பிடும்போது எந்தவித சீதோஷ்ண நிலையிலும் உயிர் வாழக் கூடியவை முதோல் இன நாய்கள்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.