;
Athirady Tamil News

மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு: 2 பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடு வக்கீல் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

0

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினரின் ஆய்வறிக்கை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த நகலை ஸ்ரீமதியின் பெற்றோருக்கு வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது. தனியாக மனு தாக்கல் செய்து பெற்றுக்கொள்ள அறிவுரை கூறி உள்ளது. இதுபற்றி ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் காசிவிஸ்வநாதன் கூறியதாவது:-

ஆய்வறிக்கை
ஸ்ரீமதி வழக்கில் முதல் தகவல் அறிக்கை, முதல் மற்றும் 2-வது பிரேத பரிசோதனை, ஜிப்மர் ஆய்வறிக்கை ஆகியவற்றை கேட்டு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நகல் மனு போட்டு இருந்தோம். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இந்த மனுவை தாக்கல் செய்தோம். ஏற்கனவே ஐகோர்ட்டு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் முடிவு செய்தால் 2 பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகள், ஜிப்மர் ஆய்வறிக்கை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது. அதன்படி நகல் மனு போட்டதில், முதல், 2-வது பிரேத பரிசோதனை அறிக்கை நகல்கள், சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் எப்.ஐ.ஆர். நகல் மட்டும் கொடுத்தார்கள்.

முரண்பாடு
ஆனால் ஜிப்மர் ஆய்வறிக்கையை தரவில்லை. ஐகோர்ட்டு உத்தரவில் அதுபற்றி தெரிவிக்கவில்லை என்று கூறி, ஆய்வறிக்கையை விழுப்புரம் கோர்ட்டு தரவில்லை. மீண்டும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, அந்த ஆய்வறிக்கையை பெறுவோம். அந்த ஆய்வறிக்கையை தந்தால் தான் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியும். இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரும் ஜாமீன் கேட்டுள்ளனர். பள்ளியை திறக்கவும் முயற்சி நடக்கிறது. இந்த ஆய்வறிக்கை கிடைத்தால், அதை வைத்து நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க ஏதுவாக இருக்கும். முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், 2-வது பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் நிறைய வித்தியாசம், முரண்பாடுகள் உள்ளது. 2-வது பிரேத பரிசோதனையில் மாணவிக்கு காயங்கள் அதிகம் உள்ளது. எலும்பு முறிவு உள்ளது. மாணவிக்கு பலவந்தம் ஏற்பட்டது போல் தெரிகிறது. இருந்தாலும் மருத்துவ வல்லுனர்களை வைத்து ஆய்வு செய்வோம். தமிழக முதல்-அமைச்சரை வருகிற 27-ந் தேதி (அதாவது நாளை) சந்திக்க உள்ளோம். சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நடைபயணம் கைவிடப்படும். இல்லையென்றால் மாணவியின் பெற்றோர் நடைபயணத்தை மேற்கொள்வார்கள் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.