;
Athirady Tamil News

‘விக்ராந்த்’ விமானந்தாங்கி போர்க்கப்பல் வருகிற 2-ந்தேதி படையில் சேர்ப்பு..!!

0

இந்திய கடற்படைக்கு விமானந்தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2009 ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த கட்டுமானப்பணிகள் முடித்து கடந்த ஆண்டு முதல் வெள்ளோட்டம் நடந்து வந்தது. 4 கட்டங்களாக நடந்து வந்த சோதனை அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் வருகிற 2-ந்தேதி முறைப்படி படையில் சேர்க்கப்படுகிறது. இந்த கப்பலை பிரதமர் மோடி முறைப்படி சேர்த்து வைக்கிறார். 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் மற்றும் 59 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கான கட்டுமான செலவு ரூ.19,341 கோடி ஆகும். இந்த கப்பலில் பெண் அதிகாரிகள், பெண் அக்னிவீரர்களுக்கான தனித்தனி அறைகள் உள்பட 2,200 அறைகள் உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள் என 1,700-க்கு மேற்பட்டோர் இந்த கப்பலில் பணியாற்ற உள்ளனர்.

முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ள இந்த கப்பலில் பயன்படுத்தப்பட்டு உள்ள உருக்கு மற்றும் தளவாடங்களில் 76 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தியானவை ஆகும். குறிப்பாக டெல்லி உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போர்க்கப்பலின் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. இதற்கான பொருட்களை 100-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தயாரித்து வழங்கின. விக்ராந்த் போர்க்கப்பல் முறைப்படி படையில் சேர்ப்பதற்கு தயாராக இருப்பதன் மூலம், 40 ஆயிரம் டன்களுக்கு மேல் எடை கொண்ட விமானந்தாங்கி போர்க்கப்பல்களை வடிவமைத்து தயாரிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைந்துள்ளதாக கடற்படை துணைத்தளபதி எஸ்.என்.கோர்மடே தெரிவித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் படையில் சேர்க்கப்படும் நிகழ்வு ஒரு பொன்னான தருணமாக அமையும் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஏற்கனவே கூறியிருந்தார். விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் நாட்டின் கடற்பாதுகாப்பு எல்லையை இந்தியப் பெருங்கடலில் இருந்து பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் வரை அதிகரிக்கும் என கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.