;
Athirady Tamil News

பில்கிஸ் பானு கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

0

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பெருமளவில் இனக்கலவரங்கள் மூண்டன. அப்போது சிறுபான்மை இனத்தை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 21 வயதான கர்ப்பிணியை கற்பழித்து, அவரது 3 வயது மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 7 பேரை படுகொலை செய்த கும்பலை சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி அவர்களது தண்டனைக் காலத்தை குறைத்து குஜராத் மாநில அரசு விடுவித்து விட்டது. இது நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநில அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லால், சமூக ஆர்வலர் ரூப் ரேகா ராணி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீடுகள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

வழக்குதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, வழக்கின் பின்னணியை விளக்கினார். அதைத் தொடர்ந்து அவர், “இந்த சூழ்நிலைகளில், எழுகின்ற ஒரே கேள்வி, தண்டனைக்காலம் குறைப்பு பின்னணியில் நீதித்துறை மறு ஆய்வு என்ன என்பதுதான்” என குறிப்பிட்டார். அதற்கு நீதிபதிகள், “குற்றவாளிகள் எந்தச் செயலைச் செய்திருந்தாலும், அவர்கள் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்” என கூறினர். தொடர்ந்து கபில் சிபல், “இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு ஆவணங்களைப் பார்க்க வேண்டும், (தண்டனையை குறைத்து விடுவிப்பதில்) மனதை செலுத்தி உள்ளனரா என்பதை அறிய வேண்டும் என்பது வழக்குதாரர்களின் விருப்பமாக உள்ளது” என தெரிவித்தார். தொடர்ந்து நடந்த விசாரணைக்கு பின்னர், மேல்முறையீடுகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. விடுவிக்கப்பட்டுள்ள 11 குற்றவாளிகளும் இந்த வழக்கில் தங்களை சேர்த்துக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.