;
Athirady Tamil News

மஹிந்தவின் கட்சியில் தனித்து இயங்கும் எம்பிக்கள் – உடைகிறதா ‘ராஜபக்ஷ கோட்டை’?

0

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாக செயல்பட தீர்மானித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றிய, நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ், இந்த தீர்மானத்தை அறிவித்தார்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும, டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, சரித்த ஹேரத், சன்ன ஜயசுமன்ன, கே.பி.எஸ்.குமாரசிறி, குணபால ரத்னபால, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, உபுல் கலப்பத்தி, திலக்க ராஜபக்ஷ, லலித் எல்லாவல மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரே சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

”எமது நாடு இன்று பாரிய பிரச்னையொன்றை எதிர்நோக்கியுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான பிரச்சினைகளை சந்தித்திருந்தோம். 30 வருட கால யுத்தம் இருந்தது. அதன் பின்னர் சுனாமி ஏற்பட்டது. கோவிட் 19 தொற்று ஏற்பட்டது. இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், சரியாக வழி நடத்திய நாடாளுமன்றம் எமது நாட்டில் இருந்தது. எனினும், இன்று அந்த சந்தர்ப்பம், அந்த வலு எமக்கு இல்லை.

நாட்டில் காணப்படுகின்ற பொது கருத்துக்களுக்கும், நாடாளுமன்றத்தில் காணப்படுகின்ற கருத்துக்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. இந்த நாடாளுமன்றம் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து எல்லா விடயங்களும் செய்வதற்கு ஆணையை தாருங்கள் என நீங்கள் மக்களிடம் கேட்கவும் இல்லை. அவ்வாறான வெற்றியை மக்கள் எமக்கு வழங்கவும் இல்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற விதத்தில், நாம் மிகவும் தெளிவான வேலைத்திட்டமொன்றை மக்களுக்கு வழங்கியிருந்தோம். அதற்கு பாரிய வரவேற்பு கிடைத்தது. அந்த மக்கள் ஆணை, முழுமையாக திரிவடைந்தது. அன்று நாம் கூறிய விடயங்களுக்கும், இன்று நாம் செய்கின்ற விடயங்களுக்கும் இடையில் வானும், மண்ணும் என்ற அளவிற்கு வேறுபாடு காணப்படுகின்றது.

ஜனநாயக சமூகத்திற்கு தேர்தல் அவசியமானது. எனினும், தேர்தல் நடத்தப்படவில்லை. அதனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயாதீன குழுவாக எதிர்கட்சி ஆசனத்தை பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம்.” என ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

அதிகரிக்கும் சுயேச்சைகளின் எண்ணிக்கை

இவ்வாறு சுயாதீனமாக எதிர்கட்சி ஆசனத்தில் 13 பேர் அமர்ந்ததை அடுத்து, எதிர்கட்சி ஆசனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி, 225 பேரை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், ஆளும் கட்சி ஆசனத்தில் 115 உறுப்பினர்களும், எதிர்கட்சி ஆசனத்தில் 109 உறுப்பினர்களும் அமர்ந்துள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன, ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இது தொடர்பில் கருத்துரைத்தார்.

”கட்சிக்குள் இருக்க முடியவில்லை என்றால், அரசாங்கத்திற்குள் இருக்க முடியவில்லை என்றால், அதிலிருந்து விலகுவதற்கு எந்தவொரு நபருக்கும் ஜனநாயக ரீதியில் உரிமை உள்ளது. இது புதிய விடயம் கிடையாது. இது பழைய விடயம். இவ்வாறு கூறுவோர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்களா? அப்படி இல்லையென்றால், வீழ்ந்துள்ள நாட்டை மேலும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்களா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைந்து, இதனை செய்ய வேண்டும். இந்த இடத்தில் இருவர் தேசிய பட்டியல் ஊடாக வருகைத் தந்தவர்கள். எமது கட்சியிலிருந்து சுயாதீனமாகி, கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கின்றோம். அவர்களை அவர்களது பதவிகளிலிருந்து விலத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சிக்குள் இருக்க முடியாமையினாலேயே, அவர்கள் சுயாதீனமாகியுள்ளனர். புதிய தவிசாளர் ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தெரிவு செய்யப்படுவார்” என ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க 134 மேலதிக வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அன்றைய தினத்திலேயே இந்த 13 பேரும் எதிர்கட்சியில் அமர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

இவ்வாறு எதிர்கட்சி ஆசனத்தில் சுயாதீனமாக அமர்ந்தவர்கள், ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தெரிவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் எனவும் அவர் கூறுகின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 13 பேர், சுயாதீனமாக எதிரணி ஆசனத்தில் அமர்ந்தமை குறித்து, ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

”நேரடி மொட்டு கட்சியின் 12 எம்பீக்கள், எதிரணியில் அமர்ந்தார்கள். இவர்கள் ஐமசவில் சேரவில்லை. தனியணி. ராஜபக்ஷ சாம்ராஜ்ஜியம் உடைகிறது. இதுதான் இங்கே முக்கியம். இந்த இனவாத சாம்ராஜ்யம் மீளவும் தலையெடுக்க விடக்கூடாது. அவர்களது பலமே மூவரும் ஒன்றிணைந்து, மீளுருவாவதுதான். கோதா நாடு திரும்புவதில் இதுவும் ஒரு மறை காரணம். அதை கண்காணிக்கனும். ஒருவரை வஞ்சகமாக புகழ்ந்து, மற்ற இருவரை வெஞ்சகமாக இகழ்வதும் இதனால்தான். நம்ம சில அறிவாளிகளுக்கு இது புரிவதில்லை. என்னங்க செய்ய…?” என்று மனோ கணேசன் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.