;
Athirady Tamil News

விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்- போலீசார் குவிப்பு..!!

0

2024-ம் ஆண்டில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தன்னை புதுப்பித்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன்படி காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 3,500 கிலோ மீட்டர் தூர பாதயாத்திரை வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் ‘பாரத் ஜோடோ’ யாத்திரைக்கு முன்பு விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் அறிவித்து இருந்தது.

இந்த பிரச்சினைகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற இரு அவைகளிலும் கடுமையாக போராடியது. தற்போது தொண்டர்கள், நிர்வாகிகளுடன் பிரமாண்ட போராட்டம் நடத்த முடிவு செய்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலையில் இருந்தே காங்கிரஸ் தொண்டர்கள் ராம் லீலா மைதானத்தில் குவிய தொடங்கினார்கள். டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர் காங்கிரசின் இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். பிற்பகலில் அவர் பங்கேற்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். கட்சி தலைவர் சோனியா காந்தியும், அவரது மகளும், பொதுச் செயலாளருமான பிரியங்காவும் வெளிநாட்டில் இருப்பதால் இன்றைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை. பாதயாத்திரைக்கு முன்பு நடைபெறும் இந்த போராட்டம் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. காங்கிரசின் இந்த பிரமாண்ட போராட்டத்தையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.