;
Athirady Tamil News

46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகள்- குடியரசுத் தலைவர் இன்று வழங்குகிறார்..!!

0

தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணைய தளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவிக்கிறார். டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: இந்த சந்தர்ப்பத்தில் சிறந்த ஆசிரியரும், தத்துவ மேதையும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். மாணவர்களிடம் அறிவு மட்டுமின்றி, மனிதநேய விழுமியங்களை விதைக்க முயற்சிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் ஒரு முன்னுதாரணம். புதிய ஆராய்ச்சிகள், சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் நமது ஆசிரியர்கள் தொடர்ந்து தங்கள் திறன்களையும் திறமையையும் மேம்படுத்த முயற்சிக்கின்றனர்.

தேசிய கல்விக் கொள்கை மூலம் நமது கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. உன்னதமான ஆசிரியத் தொழிலில் அதிக திறமைசாலிகள் சேருவார்கள் என்று நம்புகிறேன். நாட்டின் நலனுக்காக எல்லா வகையிலும் உழைக்கத் தயாராக இருக்கும் பொறுப்புள்ள குடிமக்கள் உருவாகுவதற்கு அவர்களின் முயற்சிகள் காரணமாகும். அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல் ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.