;
Athirady Tamil News

யாழ். மாநகர ஆணையாளருக்கு எதிராக ஆளுநரிடம் முறைப்பாடு!!

0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் சபை மாண்புகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும், சபையைப் பிழையாக வழி நடத்திச் செல்கிறார் என்றும் மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளுக்கென ஜப்பான் அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட நான்கு வாகனங்களைப் பெற்றுக் கொள்வதில் சபைத் தீர்மானத்துக்கு முரணாகத் தொடர்பாடலை மேற்கொண்டு, சபையில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் குறிப்பிடட்ட வாகனங்களை யாழ். மாநகர சபை பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாகச் சபை முடிவு செய்துள்ளது என இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகத்துக்கு ஆணையாளரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டமை கண்டனத்துக்குரிய ஒரு செயற்பாடு என்றும், சபையின் தீர்மானங்களை உரிய முறையில் செயற்படுத்தத் தவறும் மாநகர சபை ஆணையாளர், சபைக்குத் தெரியாமல் சபையின் பெயரால் வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றுக்குக் கடிதம் அனுப்பியதுடன், சபைக்கு நன்கொடையாகக் கிடைக்க வேண்டிய சொத்துக்களைப் பெற்றுக் கொள்ள விடாமல் சபைக்கு இழப்பை ஏற்படுத்தியிருப்பதனால் இது பற்றி வடக்கு மாகாண ஆளுநர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் யாழ். மாநகர சபை உறுப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை – ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படவிருந்த நன்கொடை வாகனங்களின் தீர்வைக்கென அந் நாட்டுத் தூதரகத்தினால் யாழ். மாநகர சபைக்கு வழங்கப்பட்ட நிதியைத் தூதரகம் மீள வழங்குமாறு கோரியதையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியதன் அடிப்படையில் குறித்த வாகனங்களுக்கான வேண்டுகோளை முன்வைக்குமாறு ஜனாதிபதி தெரிவித்திருந்ததனால், அது குறித்து ஜப்பானியத் தூதரகத்துக்கு பதில் முதல்வர் து.ஈசன் எழுத்து மூலம் வேண்டுகோள் அனுப்ப முற்பட்டதையும் மாநகர ஆணையாளர் அதனைத் தடுத்ததன் மூலம் சபை உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்றும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் தற்சமயம் யாழ்ப்பாணத்தில் இல்லாத காரணத்தினால் அவர் யாழ்ப்பாணம் வந்ததும் இது பற்றிய விசாரணையை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.