;
Athirady Tamil News

இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்பு; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு..!!

0

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், ராணி எலிசபெத் மறைவு செய்தி அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. லண்டனில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டுள்ளனர். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல் தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் ஒரு சகாப்தத்தினை வரையறுத்தவர் என்றும் ஒரு சிறந்த பெண்மணி என்றும் அவர் கூறியுள்ளார். பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இருவரும் வாஷிங்டன் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.

அதிபர் பைடனிடம் செய்தியாளர்கள், இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்வீர்களா? என கேள்வி எழுப்பியதற்கு ஆம். அடுத்த என்ன என்ற விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் நான் செல்வேன் என பதில் கூறினார். நான் இன்னும் அரசர் சார்லசிடம் பேசவில்லை. அவரை நான் அறிவேன். அவரிடம் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என கூறினார்.

இதுபற்றி சி.என்.என். வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, பைடன் லண்டன் புறப்படுவதற்கான தொடக்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான பணிகளில் வெள்ளை மாளிகை உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் பற்றி இங்கிலாந்து அரண்மனை தகவல் தெரிவித்த பின்னர், அதில் கலந்து கொள்வது பற்றி அறிவிக்க பைடன் திட்டமிட்டு உள்ளார் என்று இந்த விவகாரம் பற்றி நெருங்கிய வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.