;
Athirady Tamil News

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பெங்களூருவில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு..!!

0

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச நகரமாக கருதப்படும் பெங்களூருவில் வரலாறு காணாத மழை பெய்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. இங்கு கடந்த 4-ந்தேதி இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அதாவது மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, ஒயிட்பீல்டு, பெல்லந்தூர், இந்திராநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

குடியிருப்புகள் நீரில் மூழ்கின. சன்னி புரூக்ஸ் லே-அவுட், ரெயின்போ லே-அவுட், எமலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. ரூ.5 கோடி முதல் ரூ.30 கோடி வரை மதிப்புடைய சொகுசு பங்களாக்களில் வசித்த பெரு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஓட்டல்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகள் இருந்தும் அவர்கள் உணவுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டது.

பெங்களூரு வெள்ளம் அவர்களை நிர்கதி நிலைக்கு தள்ளியுள்ளது. அந்த பகுதிகளில் தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. அதனால் அங்கு இருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு திரும்பியுள்ளனர். வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி முழுமையாக சேதம் அடைந்துள்ளன. தரைத்தளத்தில் உள்ள வீடுகளில் இருந்து பிரிட்ஜ், சமையலறையில் இருந்து பொருட்கள், மரச்சாமான்கள், விலை உயர்ந்த வீட்டு அலங்கார பொருட்கள் அனைத்தும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளம் வடிந்த குடியிருப்புகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வீடுகளை சுத்தப்படுத்தும் பணியில் வீட்டின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வரலாறு காணாத மழையால் எச்.ஏ.எல். அலுவலகம், விப்ரோ மற்றும் 500-க்கும் மேற்பட்ட தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் புகுந்ததால் பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை விட்டு இருந்தது.

மேலும் வீடுகளில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தி இருந்தது. வரலாறு காணாத மழைக்கு 500-க்கும் மேற்பட்ட தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப (ஐ.டி.-பி.டி.) நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 30-ந்தேதி பெய்த மழைக்கே ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ.1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த வெள்ளத்தால் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. அரசு முறைப்படி ஆய்வு செய்து சேதங்களை மதிப்பிட்டால் மட்டுமே உண்மையான சேதம் எவ்வளவு என்பது தெரியவரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.