;
Athirady Tamil News

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தது: தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு..!!

0

ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு இழக்கக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 15-ந்தேதி வரையிலும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பந்தலூரில் 14 செ.மீ. மழை
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 14-ந்தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி பந்தலூரில் 14 செ.மீ., தேவாலாவில் 13 செ.மீ., வூட் பிரையர் எஸ்டேட்டில் 10 செ.மீ., சின்னக்கல்லாரில் 7 செ.மீ., வால்பாறை, அவலாஞ்சி, ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளியில் தலா 6 செ.மீ., சோலையாறில் 5 செ.மீ., கூடலூர் பஜார், சின்கோனாவில் தலா 4 செ.மீ., நடுவட்டம், மேல்பவானி, மேல் கூடலூரில் தலா 3 செ.மீ., சேலம், பெரியார், தேக்கடி, எமரால்டில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.