;
Athirady Tamil News

கல்முனை பிரதேச செயலக பாகுபாடு- மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!! (வீடியோ, படங்கள்)

0

கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுப்பதாகவும் அரச சேவைகளைப் பெறுவதிலும் தேவையில்லாது தலையிட்டு அநீதி இழைக்கப்படுவதாகவும் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக செயற்பாடுகளில் தேவையற்ற விதத்தில் தலையீடு செய்வதோடு மக்களுக்கான சேவைகளைப் பெறுவதிலும் தடையாக இருக்கும் அதிகாரிகளுக்கு எதிராகவும் அந்தப் பிரதேச மக்கள் இன்று தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை 01 D கிராம சேவகர் பிரிவில் இருந்த அரச காணிகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்ததளிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான உறுதிப் பத்திரங்களைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காது முடக்கி வைத்திருந்ததற்கு எதிராகவும் அந்த உறுதிப் பத்திரங்களை தற்போது கல்முனை தெற்கு ஊடாக பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விட்டதற்கு எதிராகவும் இந்த மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட எங்களுடைய காணி உறுதிப் பத்திரங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு ஊடாகவே பெற்றுக் கொள்வோம் எனும் கோரிக்கையையும் இதன்போது மக்கள் முன் வைத்தனர்.

கல்முனை தெற்கு பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குச் சென்று தமது மகஜரை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் அவர்களிடம் கையளித்திருந்ததோடு இந்த விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருக்குரிய மகஜர் ஒன்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.