;
Athirady Tamil News

இலங்கை தமிழர் பிரச்னை: இந்தியாவின் ஐ.நா. நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

0

இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என ஐநா சபையில் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 51வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையிலேயே, இந்தியா இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என இந்தியா அந்த கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் எனவும் இந்தியா கூறுகின்றது.

இதன்படி, அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடாத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப்பிரச்னைக்கு உரியவாறான அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பூர்த்திசெய்வதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் இந்தியா சார்பில் உரையாற்றிய பிரதிநிதி கரிசனத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான நீதி, சமாதானம், சமத்துவம் மற்றும் சுயகௌரவம் ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடியவாறான அரசியல் தீர்வை வழங்குவதே இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது என குறிப்பிட்ட அவர், தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியானது கடன்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் பொருளாதாரத்தின் மட்டுப்பாடுகள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்பவற்றைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பின் 13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாகாண சபைத் தேர்தல்கள் விரைவாக நடாத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்ட இந்தியப் பிரதிநிதி, அதன்மூலம் அனைத்து இலங்கையர்களாலும் சுபிட்சமான எதிர்காலத்தை முன்னிறுத்திய தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும், எனவே இவ்விடயத்தில் இலங்கை உடனடியானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தியாவின் இந்த கரிசனமானது, ஒரு கானல் நீர் கரிசனம் என இலங்கையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

தமிழர்களுக்கு குறைந்தபட்ச தீர்வு இதுவென இந்தியா கருதிய போதிலும், உண்மையில் தமிழர்களுக்கான தீர்வு இது கிடையாது என அவர் கூறுகின்றார்.

”வருடா வருடம் இதே விடயத்தையே இந்தியா கூறுகின்றது. தமிழர்களுக்கு குறைந்த பட்ச தீர்வு இதுவென இந்தியா கருதுகின்றது. ஆனால் உண்மையில் அது தீர்வு அல்ல. மாகாண சபை இவ்வளவு காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலே இல்லை. மாகாண சபை இயங்கவில்லை. இப்படியான சூழ்நிலையிலும், தமிழ் மக்கள் முன்னர் போன்றேதான் வாழ்கின்றார்கள். மாகாண சபை ஒத்தி வைத்தமையினால், தமிழர்களுக்கு பாதிப்பு வரவில்லை. அப்படியே மூடி மறைக்கும் வேலையை தான் அரசாங்கம் செய்யும். கோட்டாபய ராஜபக்ஸ இருக்கும் போது, மாகாண சபைத் தேர்தல் தேவையில்லை என சொல்லப்பட்டது. அவர் அதற்கு பதில் சொல்லவில்லை. அவர்கள் எடுத்த நிலைப்பாட்டை தான் ஜெனீவாவில் ரணில் இன்று அறிவித்திருக்கின்றார். அதனால், பெரிய மாற்றங்கள் வராது. ரணில் புதிதாக ஒன்றும் செய்ய மாட்டார். பொருளாதார ஸ்திரதன்மை, அரசியல் ஸ்திரதன்மை இல்லாமல், அவரால் செய்ய முடியாது” என ஆர்.சிவராஜா குறிப்பிடுகின்றார்.

தமிழர்களுக்கான தீர்வு என்ற விடயமானது, ஓர் இழுத்தடிப்பு வேலையாகவே காணப்படுகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், இந்தியா தொடர்ந்தும் பாரிய உதவிகளை வழங்கி வருகின்ற இந்த பின்னணியிலேயே, தமிழர் பிரச்னைக்கான தீர்வு குறித்து இந்தியா கரிசனை வெளியிடுகின்றமை, மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை கொண்டு வருமா? என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜாவிடம் வினவினோம்.

”மாற்றத்தை ஏற்படுத்தவே படுத்தாது. தமிழர் பிரச்னை குறித்து இந்தியா பேசுகின்ற போதிலும், இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் அதனூடாக எந்தவித நன்மையும் இல்லை. அதுவொரு நிலைபாடு. வழமை போல் இந்தியாவின் ஓர் அறிவிப்பு. அவ்வளவு தான்” என அவர் கூறுகிறார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுகையில், “ராஜதந்திர அழுத்தம் காரணமாகத்தான் இந்திய பிரதிநிதி இவ்வாறு ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தெரிவித்திருக்க வேண்டும். உண்மையில் இலங்கை தமிழர்கள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என இந்தியா நினைத்திருந்தால் அதனை எப்போதோ கொண்டு வந்திருக்கலாம். அப்படி பல வாய்ப்புகள் இருந்தும் அதனை இந்தியா செய்யவில்லை.” என்றார்.

“இப்போது இலங்கை தன் கட்டுப்பாட்டை மீறியோ அல்லது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதால் இந்தியா ஒரு அழுத்தத்தை விளைவிக்க இவ்வாறு கூறியிருக்கலாம். இலங்கை மீதான பல குற்றச்சாட்டுகளை கடந்து அந்த நாட்டுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்த இந்தியா, இவ்வாறு கூறுவது மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.”

“2009-ல் இருந்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் இலங்கைக்கு ஆதரவாகத்தான் இந்தியா செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு ராஜதந்திர ரீதியாக நெருக்கடியான நிலையை இந்தியா கொடுக்கக்கூடும் என்பதைவிட, அப்படி நெருக்கடியை கொடுக்கும் நாடு இந்தியா அல்ல. எங்களால் அழுத்தம் தர முடியும் என்று காண்பிக்கக்கூடிய நாடுதான் இந்தியாவே தவிர, உண்மையில் அத்தகைய அழுத்தத்தை இந்தியாவால் ஏற்படுத்த முடியாது. இலங்கைக்கு ராஜதந்திர ரீதியாக ஒரு செய்கையை காண்பிக்கிறார்கள், அவ்வளவுதான். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது மற்ற நாடுகளைவிட இந்தியாதான் அதிகமாக உதவி செய்தது. அப்படி இருக்கையில் எப்படி ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராக செயல்பட முடியும்?” என்றார் ராமு மணிவண்ணன்.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு இலங்கையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இலங்கையை பொறுத்தவரை இந்தியாவின் ராஜதந்திரம் என்பது ‘வட இந்திய’ அரசியல்தான். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இந்தியா இலங்கைக்கு நட்பு நாடு. ஆனால், தமிழகமோ அல்லது தென்னிந்திய அரசியலில் இருந்து பார்க்கும்போது அது உண்மை கிடையாது. இலங்கை ஏறக்குறைய முழுமையாக சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு செல்லும்போது இந்தியப் பெருங்கடலில் புவிசார் மாற்றங்கள் நிகழும்போது இந்திய அரசாங்கத்தின் பார்வையில் ஒரு மாற்றத்தை அவதானிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை ஒரு முழுமையான கட்டாயமாக இந்தியா எதிர்பார்க்கவில்லை. ராஜதந்திர அரசியலில் இந்தியாவைவிட பலமடங்கு முன்னோடி நாடாக இலங்கை இருக்கிறது. தேவைப்படும்போது இந்தியாவை புறக்கணிப்பதும் மற்ற தருணங்களில் மிக மிக நெருக்கமாக இருப்பதும் இலங்கைக்கு கடினமான ஒன்று அல்ல” என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.