;
Athirady Tamil News

தமிழகம் மீது பிரதமருக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் இருக்கிறது – நிர்மலா சீதாராமன்..!!

0

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமருக்கு நல்ல ஆயுளை வழங்க வேண்டும் என்று இந்த நல்ல நாளில் இறைவனிடம் நான் வேண்டிக் கொள்கிறேன். பிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்கவர். ஒக்கிப்புயலின் போது என்னை தமிழகத்தின் கடைகோடி மாவட்டம் மற்றும் கேரள எல்லைக்கு அனுப்பியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. அந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பிரதமர் எனக்கு அறிவுறுத்தினார். அந்த நேரத்தில், கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பாமல் இருந்தது தொடர்பாக அரசு கவனமாக நடவடிக்கை எடுத்தது.

காணாமல் போன மீனவர்களை மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தி இருந்தார். அதற்காக கடற்படை, விமானப்படை மற்றும் அனைத்து படகுகளையும் பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டோம். கடைசி மீனவரை உயிரோடு மீட்கும் வரை முயற்சியை கைவிடக்கூடாது என பிரதமர் அறிவுறுத்திக்கொண்டே இருந்தார். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்டோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட போதும் நேரடியாக சென்று இந்த விஷயத்தில் தீர்வு காண வேண்டும் என பிரதமர் என்னை அனுப்பினார்.

அந்த மீனவரின் உடலை வாங்காமல் ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என பெற்றோர் போராடிக் கொண்டிருந்தனர். நான் சென்று அந்தப் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ‘அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்’ என அறிவித்த பிறகு அந்த மீனவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தின் மீது பிரதமருக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. தமிழகத்தின் இலக்கியங்கள் உள்ளிட்டவை பற்றி பிரதமர் மோடி பலமுறை என்னிடம் பேசியிருக்கிறார் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.