;
Athirady Tamil News

விரைவில் பதுங்கு குழிக்குள் ஒளிய நேரிடும்!!

0

வானளாவ உயரும் வாழ்க்கைச் செலவு, வட்டி வீத அதிகரிப்பு மற்றும் பல பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெறுவதை தடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அடக்குமுறையை கையாள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில், சர்வாதிகாரியாகச் செயற்பட முயல்வதாக குற்றம் சுமத்தினார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயங்களைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதை விமர்சித்த அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் சுதந்திரத்தை முற்றாகப் பறித்து சர்வாதிகாரியாகச் செயற்பட முயல்வதாக குற்றம் சுமத்தினார்.

இந்த சீர்குலைப்பு நடவடிக்கைக்கு எதிராக நீதித்துறை, அரசியலமைப்பு ஆகியவற்றுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து மக்களை வீதிக்கு அழைத்துச் செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடக்குமுறை மூலம் நாட்டை ஆள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பினால் அது வெறும் கனவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது பாதுகாப்புக்காக பல இராணுவத்தினரையும் பதுங்கு குழியையும் கூட வைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, மக்கள் எதிர்ப்பால் தப்பியோட வேண்டி ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவும் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார் என்றும் அவர் விரைவில் ஒரு பதுங்கு குழியில் ஒளிந்து கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவரது உயர் பாதுகாப்பு வலயங்கள் போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மக்கள் மீதான இந்த அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய அவர், இந்த சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு எதிராக சகல நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.