;
Athirady Tamil News

இலங்கை பணவீக்கம் ஆகஸ்டில் 70.2% ஆக பதிவு – யாருக்கெல்லாம் பாதிப்பு?

0

இலங்கையில் 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி நிலவி வரும் வேளையில், கடந்த ஆகஸ்டு மாதம் அந்நாட்டின் ஆண்டு பணவீக்க விகிதம் 70 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை காட்டிலும் உணவுப் பொருட்களின் விலை 84.6 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

2.20 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கை இந்த ஆண்டு அந்நிய செலவாணி பற்றாக்குறையை எதிர்கொண்ட வேளையில், அந்நாடு, நிதி மற்றும் அரசியல் ரீதியாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

எரிபொருள், உரம் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட முக்கிய இறக்குமதி தேவைக் கூட பெற முடியாத நிலைக்கு அந்நாடு சென்றது. நாட்டின் பொருளாதார மந்தநிலை 70 சதவீதம் அளவுக்கு உச்சத்தைத் தொட்ட பிறகு தணியத் தொடங்கியதால் பணவீக்கம் குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி கடந்த மாதம் கூறியது.

இந்த நிலையில், கடந்த வாரம் வெளியான அதிகாரபூர்வ தகவல்களின்படி கடந்த மூன்று மாதங்களில் இலங்கை பொருளாதாரம் 8.4 சதவீதம் வரை குறைந்துள்ளதை காட்டியது.

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்புவரை டாலர் கையிருப்புக்கு சுற்றுலா துறையைதான் பெரிதும் நம்பியிருந்தது இலங்கை.

ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்த எல்லையை மூடியது, சுற்றுலா துறையை பெரிதும் பாதித்தது. அதுபோக அரசின் முறையற்ற நிதி மேலாண்மை ஆகிய காரணங்களால் இலங்கை பெரும் கடனாளியானது.

ஜூலை மாதம் நாட்டின் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய பிறகு பதவியில் இருந்து விலகினார்.

முன்னதாக பெருமளவிலான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வப்போது அது வன்முறையாகவும் மாறியது.

உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலையேற்றத்தை கண்ட மக்களின் போராட்டம் கிட்டதட்ட மூன்று மாத காலம் நீடித்தது.

இந்த நெருக்கடியை ராஜபக்ஷவின் நிர்வாகம் சரியாக கையாளவில்லை என இலங்கை மக்களில் பலர் குற்றம்சாட்டினர்.

இந்த மாத தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக கொடுக்க ஒப்புக் கொண்டது.

இலங்கையின் கடன்களை மறுசீரமைக்க அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செவ்வாய்க்கிழமை இந்தியா தெரிவித்திருந்தது. அந்நாட்டில் நீண்ட கால முதலீடுகளை செய்யலாம் என்றும் கூறியது.

இதற்கு முன்பு இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது இந்தியா.

இலங்கையில் உர இறக்குமதிக்காக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி அளித்துள்ளது இந்தியா.

இந்த நிலையில், இலங்கைக்கு கடனுதவி வழங்கும் அமைப்புகளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23) சந்தித்து, நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை எடுத்துரைத்து கடன்களை மறுசீரமைக்கும் திட்டங்கள் பற்றி விவாதிக்க இலங்கை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை உள்ள 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று.

உணவுப் பொருட்களின் விலை ஏறினால் அது இலங்கை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாரம் மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவு பாதுகாப்பு இப்போது வரையில் ஒரு பெரும் கவலையாக உள்ளது. ஏனென்றால் உரத்திற்கு அங்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு நாணயங்களும் இல்லை.

இது விவசாயத்தை பெரிதும் பாதித்துள்ளது.

உணவு உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது என சிலர் கணித்துள்ளனர்.

அந்நிய செலாவணி மதிப்பு குறைந்துள்ளதால் வெளிநாடுகளிலிருந்து உணவு வாங்கும் வாய்ப்பும் இல்லை

இலங்கையில் வரக்கூடிய மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையும் என ஐநா தெரிவித்துள்ளது. எனவே அங்கு உடனடியாக உதவிகள் தேவை என்றும் ஐநா தெரிவித்துள்ளது

இலங்கைக்கான ஐநாவின் உதவியின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவிலிருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அரிசி இலங்கைக்கு வந்துள்ளது.

மேலும் அதிகளவிலான அரிசி, பருப்புகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்படவுள்ளது.

இலங்கையின் மக்கள் தொகை மொத்தம் 22 மில்லியன் இதில் 3.4 மில்லியன் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.