;
Athirady Tamil News

பெங்களூருவில் ரூ.208 கோடியில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திறந்துவைக்கிறார்..!!

0

ராக்கெட் உற்பத்தி மையம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை அமைத்து கொடுக்க கடந்த 2013-ம் ஆண்டு எச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து இருந்தது. இதையடுத்து இந்த ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை ரூ.208 கோடி செலவில் கட்டி முடிக்க கடந்த 2016-ம் ஆண்டு இஸ்ரோ-எச்.ஏ.எல். இடையே மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து எச்.எல்.ஏ. வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்சார்பு நிலையை அடைய…
இஸ்ரோவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்பேரில் ரூ.208 கோடி செலவில் எச்.எல்.ஏ. சார்பில் ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் இந்தியா, வானில் செலுத்தி வரும் ராக்கெட்டுகளுக்கு தேவையான கிரையோஜெனிக், செமி கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிக்க 70 உயர்நுட்ப எந்திரங்கள், சோதனை கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ராக்கெட் என்ஜின்களை தயாரிக்கும் பணி அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் முதல் முழுவீச்சில் நடக்க உள்ளது. இந்த ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையம் இஸ்ரோவின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும். உயர்வேக ராக்கெட் என்ஜின்கள் தயாரிப்பில் தற்சார்பு நிலையை அடையவும் இந்த மையம் உதவும். இவ்வாறு எச்.ஏ.எல். நிறுவனம் கூறியுள்ளது.

6-வது நாடு இந்தியா

அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, ரஷியா ஆகிய நாடுகளில் மட்டுமே கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கின. 2014-ம் ஆண்டு இந்தியா விண்ணில் ஏவிய ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் கிரையோஜெனிக் என்ஜினை தயாரிக்கும் 6-வது நாடாக இந்தியா உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் கிரையோஜெனிக் என்ஜின்களுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை தயாரிக்க ரூ.860 கோடி ஒப்பந்தத்தை புதிய விண்வெளி இந்திய நிறுவனத்திடம் இருந்து எச்.ஏ.எல். எல் அன்ட் டி நிறுவனங்கள் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.dailythanthi.com/News/India/208-crore-rocket-engine-manufacturing-center-801925

You might also like

Leave A Reply

Your email address will not be published.