;
Athirady Tamil News

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது: இன்று மாலை கொடியேற்றம்..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வரும் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மாலை அங்குரார் பணம் நடந்தது. இன்று மாலை தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

அதன் பிறகு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாத வீதிகளில் உலா வருகிறார். பிரம்மோற்சவ விழாவையொட்டி ஏழுமலையான் கோவில் முழுவதும் வண்ண மலர்கள், பழங்கள், மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

இதனால் திருமலை முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது. இன்று மாலை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதிக்கு வந்து ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டு வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கிறார். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறுகையில்:- பிரம்மோற்சவ விழாவை காண லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கருட சேவை அன்று கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்பதற்காக அன்று மட்டும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு 3 ஆயிரம் டிரிப்பு பஸ்கள் இயக்கப்படும். மற்ற பிரம்மோற்சவ நாட்களில் 2 ஆயிரம் டிரிப்புகள் பஸ்கள் இயக்கப்படும். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பக்தர்களுக்கு தங்கு தடை இன்றி லட்டுகள் கிடைப்பதற்காக 9 லட்சம் லட்டுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் தன்னார்வலர்கள் நட்பாக பழகி சேவைகள் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் பக்தர்கள் மனது புண்படும் படியாக நடந்து கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். திருப்பதியில் நேற்று 52,682 பேர் தரிசனம் செய்தனர். 15,805 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.57 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.